உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான புகழ்பெற்ற இயற்பியல் போட்டி ஒன்று கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அப்போட்டிக்கான இணையத்தளத்துக்குள் புதன்கிழமையன்று (மே 15) மாணவர்களால் நுழைய முடியவில்லை. அதனைத் தொடர்ந்து போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
இதுகுறித்து கேட்கப்பட்டபோது, சிங்கப்பூர் ஜூனியர் ‘ஃபிசிக்ஸ் ஒலிம்பியாட்’ இயற்பியல் போட்டி இந்தப் பள்ளி ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்கு ஒத்திவைக்கப்படும் என்று கல்வி அமைச்சும் சிங்கப்பூர் இயற்பியல் கழகமும் வெள்ளிக்கிழமையன்று (மே 17) தெரிவித்தன. ஒத்திவைக்கப்பட்ட போட்டி எந்தத் தேதியில் நடத்தப்படும் என்ற விவரங்களை அவை வெளியிடவில்லை.
ஆண்டுதோறும் நடத்தப்படும் சிங்கப்பூர் ஜூனியர் ஃபிசிக்ஸ் ஒலிம்பியாட் போட்டிக்குக் கல்வி அமைச்சின் ஆதரவோடு சிங்கப்பூர் இயற்பியல் கழகம் ஏற்பாடு செய்துவருகிறது. இயற்பியல் கல்வியை உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடையே ஊக்குவிப்பது இப்போட்டியின் இலக்காகும்.
இணையத்தில் இடம்பெறவிருந்த இவ்வாண்டுக்கான போட்டியில் பங்கேற்க சுமார் 104 பள்ளிகள் 2,300 மாணவர்கள் பதிவுசெய்திருந்தனர். போட்டியின்போது எழுந்த தொழில்நுட்பப் பிரச்சினைகள் காரணமாக மாணவர்களால் போட்டி இணையத்தளத்துக்குள் நுழைய முடியவில்லை என்று கல்வி அமைச்சும் சிங்கப்பூர் இயற்பியல் கழகமும் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இரு அமைப்புகளும் மேல்விவரங்களை வழங்கவில்லை. ஒத்திவைக்கப்பட்ட போட்டியில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்குக் கட்டணம் திரும்பித் தரப்படும் என்றும் அவை குறிப்பிட்டன.

