சிங்கப்பூரில் தனியார் கூட்டுரிமை வீடுகளின் வாடகை ஏப்ரல் மாதத்தில் கீழ்நோக்கி சரிந்துள்ளது. அதே சமயத்தில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளின் வாடகை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது.
ஏப்ரலில் கூட்டுரிமை வீடுகளின் வாடகை 0.4 விழுக்காடு குறைந்தது. இந்தச் சரிவு 2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து தொடர்கிறது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் சற்று கூடியது.
சிங்கப்பூரின் சொத்துச் சந்தை இணையத்தளங்கள் ‘எஸ்ஆர்எக்ஸ்’ மற்றும் ‘99.co’ ஆகியவை மே 17ஆம் தேதி வெளியிட்ட புள்ளி விவரங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
‘இஆர்ஏ சிங்கப்பூர்’ சொத்து விற்பனை நிறுவனத்தின் முக்கிய நிர்வாக அதிகாரியான இயூஜின் லிம், புறநகர்ப் பகுதிகளில் வாடகை வீழ்ச்சியடைந்ததால் கூட்டுரிமை வீட்டு வாடகைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது என்றார்.
அண்மையில் கட்டி முடிக்கப்பட்ட பெரும்பாலான தனியார் வீடுகள் மத்திய வட்டாரத்துக்கு வெளியே அமைந்துள்ளன. இதனால் வாடகைதாரர்களைப் பெறுவதில் கடும் போட்டி நிலவுவதாக அவர் கூறினார்.
2023 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் கூட்டுரிமை வீட்டு வாடகை 4.6 விழுக்காடு குறைந்துள்ளது. முதன்மை வட்டாரம் அல்லது முக்கிய மத்திய வட்டாரத்தில் வாடகை 5.2 விழுக்காடு சரிந்தது.
‘ஆரஞ்சுடீ’ குழுமத்தின் பகுப்பாய்வு, உத்திபூர்வ பிரிவின் தலைவரான கிறிஸ்டின் சன், வாடகை குறைந்துள்ளதால் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் பலனடைவார்கள் என்று குறிப்பிட்டார்.
“குறைந்து வரும் வாடகையால் அனைத்துலக நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் சிங்கப்பூர் இருக்கும். சிங்கப்பூரில் பணிபுரிய அதிக வெளிநாட்டவர்களையும் கொண்டு வரும்,” என்று அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஏப்ரலில் கூட்டுரிமை வாடகை வீடுகளின் எண்ணிக்கை 3.1 விழுக்காடு (5,874 வீடுகள்) அதிகரித்தது. ஆண்டு அடிப்படையில் வாடகைக்கு விடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 4.4 விழுக்காடு கூடியது. அப்படியும் இது, ஏப்ரலுக்கான ஐந்து ஆண்டு சராசரியுடன் ஒப்பிட்டால் ஆறு விழுக்காடு குறைவு.
இதற்கு மாறாக வீவக வீட்டு வாடகை ஏப்ரலில் 0.3 விழுக்காடு கூடியிருக்கிறது. ஆனால் கடந்த மார்ச் மாத 0.6 விழுக்காடு உயர்வுடன் ஒப்பிட்டால் மிதமான அளவே வாடகை அதிகரித்துள்ளது.
வாடகைக்கு குறைவான எண்ணிக்கையிலேயே கழக வீடுகள் இருந்தன என்று திருவாட்டி சன் சுட்டிக்காட்டியுள்ளார்.
வீவகவிடமிருந்து நேரடியாக வீடு வாங்கிய குடும்பங்கள் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் தங்க வேண்டும். அதன் பிறகே வீட்டை வாடகைக்கு விட முடியும்.
2022ஆம் ஆண்டிலிருந்து குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் தங்கும் நிபந்தனையை பூர்த்தி செய்த வீடுகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது என்று கூறிய அவர், கழக வீடுகளின் வாடகை அதிகரிப்புக்கு இதுவே காரணம் என்றார்.
“சில வாடகைக்காரர்கள் கழக வீடுகளை வாடகைக்கு எடுக்க விரும்புவதால் அதற்கான தேவை நிலையாக உள்ளது. சொத்துச் சந்தையில் கட்டுபடியாகக் கூடிய வீடுகளாக கழக வீடுகள் தொடர்ந்து இருக்கின்றன,” என்று திருவாட்டி சன் மேலும் தெரிவித்தார்.

