தனியார் வாடகை கார் ஓட்டுநர் ஒருவர், தனது காரில் பயணம் செய்த பெண் பயணி குடிபோதையில் இருந்ததை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.
அந்தப் பயணி காரிலேயே உறங்கி விட்டதால் அவரது ஆடைகளை விலக்கி படங்களைப் பதிவு செய்து நண்பர்களுக்கு அவர் அனுப்பி வைத்தார்.
31 வயது பெண்ணை ஆளில்லாத இடத்தில் பாலியல் வன்கொடுமை செய்த முஹம்மட் நூரான்டி வாஹித், அந்தப் பெண் மயக்கத்தில் இருந்ததால் தான் ஒரு அதிர்ஷ்டசாலி என நண்பரிடம் பெருமைப்பட்டுக் கொண்டார்.
மே 17ஆம் தேதி திருமணமான 39 வயது நூரான்டிக்கு 11 ஆண்டு சிறைத் தண்டனை, ஒன்பது பிரம்படி விதிக்கப்பட்டது.
முன்னதாக தம் மீது சுமத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை, ஆபாச படங்களை விநியோகித்த குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக் கொண்டார்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது பேசிய அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர், அந்த பெண்ணையும் அவரது நண்பர்களையும் நூரண்டி ஒரு கிளப்பிலிருந்து மற்றொரு கிளப்புக்குக் கடந்த 2019 டிசம்பர் மாதம் தொடங்கி, சில சமயங்களில் அழைத்துச் செல்வார் என்று கூறினார்.
2020 பிப்ரவரி 27ஆம் தேதி விடியற்காலை குற்றச்செயல்கள் நடந்துள்ளன.
நூரான்டிக்கு தண்டனை விதிக்கப்படும்போது அவர் மீதான இதர ஏழு குற்றச்சாட்டுகளையும் நீதிபதி கவனத்தில் எடுத்துக் கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
அந்த சமயத்தில் விநியோகிப்பாளராக இருந்த நூரான்டி, மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாடகைக்கு எடுத்து இரவில் ‘ரைட்’ நிறுவனத்துக்காக கார் ஓட்டினார்.
2020 பிப்ரவரி 26ஆம் தேதி மரினா பே சேண்ட்ஸ் (எம்பிஎஸ்), அதன் பிறகு பான் பசிபிக் ஹோட்டலில் உள்ள மனமகிழ் மன்றத்துக்கு நண்பருடன் பெண் பயணி சென்றுள்ளார்.
பிப்ரவரி 27ஆம் தேதி விடியற்காலை குடிபோதை தலைக்கேறிய நிலையில் அந்தப் பெண் எம்பிஎஸ்ஸிலிருந்து பான் பசிபிக் ஹோட்டலில் உள்ள மனமகிழ் மன்றத்துக்குச் செல்ல விரும்பினார். அப்போது பயணிகளுக்காகக் காத்திருந்த நூரான்டியின் காரில் ஏறி நண்பருடன் பான் பசிபிக் ஹோட்டலுக்கு அவர் சென்றார்.
வழியில் அந்தப் பெண் வாந்தி எடுத்ததால் இரண்டு முறை கார் நிறுத்தப்பட்டது.
கார், பான் பசிபிக் ஹோட்டலை அடைந்தபோது பெண்ணின் கைபேசியைக் காணவில்லை. இதனால் நண்பரை இறக்கிவிட்டு மீண்டும் எம்பிஎஸ்ஸுக்குச் செல்லுமாறு நூரான்டியிடம் பெண் கூறினார். அப்போது முன்பக்கத்தில் பெண் அமர்ந்திருந்தார். பான் பசிபிக் ஹோட்டலை அடைந்ததும் பெண் காரில் இருக்க, நூரான்டி சுற்றுப் பகுதியில் கைப்பேசியைத் தேடினார். ஆனால் கைப்பேசி பெண்ணின் கைப்பையில் இருந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
விடியற்காலை 3.50 மணியளவில் பெண்ணை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக காரை கிராஞ்சியில் உள்ள கேரஸ் சென்டருக்கு அருகே ஒதுக்குப்புறமான இடத்தில் அவர் நிறுத்தினார். பெண்ணின் ஆடைகளை விலக்கி படம் பிடித்து நண்பர்களுக்கு அனுப்பி வைத்தார். பின்னர் கிராஞ்சி குளோஸ் இடத்துக்கு காரை ஓட்டிச் சென்ற அவர் அங்கு காரை நிறுத்திவிட்டு குடிபோதையில் பலவீனமாக இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். பெண் சுயநினைவின்றி இருந்ததால் தான் அதிர்ஷ்டசாலி என்று அவர் நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.
2020 பிப்ரவரி 28ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து நூராண்டி கைது செய்யப்பட்டார்.

