சர்க்கிட் சாலையில் உள்ள ஈரச் சந்தையில் 11 மாதங்களாக வசித்துவந்த 15 வயது பெண்ணைக் கவனித்துக்கொள்ள சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு வளர்ப்புப் பெற்றோரை அடையாளம் கண்டுள்ளது.
சர்க்கிட் சாலை ஈரச்சந்தை, உணவங்காடி நிலையத்தில் தனது தந்தை வாடகைக்கு எடுத்த கடையில் வசித்த அப்பெண், வாளிகளில் சிறுநீர் கழித்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இம்மாத இறுதிக்குள் அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு வளர்ப்புப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார்.
வளர்ப்புப் பெற்றோரின் கவனிப்பில் இருக்கும்போது அந்தப் பெண், தனது தந்தையுடன் எவ்விதத்தில் தொடர்புகொண்டாலும் அது அணுக்கமாகக் கண்காணிக்கப்படும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
பெண்ணின் தந்தையான 63 வயது ஆடவர் விசாரணையில் ஒத்துழைத்துவருகிறார். சிறார், இளையர் சட்டத்தின்கீழ் அவர் ஒருவரை உதாசீனப்படுத்தியதன் மூலம் துன்புறுத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு எட்டு ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, 8,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். ஒரு பிள்ளைக்குப் பொருத்தமான வளர்ப்புப் பெற்றோரை அடையாளம் காணும்போது அப்பிள்ளையின் பாதுகாப்பு, அவர் நிலையாக இருப்பது ஆகியவை முக்கியமாகக் கருத்தில்கொள்ளப்படும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
“இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை வளர்ப்புப் பெற்றோர், சிறப்புத் தேவையுடைய பிள்ளையைக் கவனித்துக்கொள்ளக் கூடியவர்களாக இருக்கவேண்டும்.
“பிள்ளையின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் நோக்கில் வளர்ப்புப் பெற்றோருடன் இணைந்து செயல்படுவது, தேவைப்படும்போது நிபுணத்துவ ஆதரவு வழங்குவது ஆகியவை அதில் அடங்கும்,” என்று அமைச்சு கூறியது.
ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதியன்று தேசிய சுற்றுப்புற அமைப்பு, தான் அடிக்கடி மேற்கொள்ளும் சோதனைகளை மேற்கொண்டது. அப்போது சர்க்கிட் சாலை ஈரச்சந்தைக் கடை ஒன்றில் சம்பந்தப்பட்ட பதின்ம வயது பெண்ணும் அவரின் தந்தையும் கிட்டத்தட்ட ஓராண்டாக வசித்துவந்ததைத் தெரிந்துகொண்டது.
தொடர்புடைய செய்திகள்
இருவரும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் ஆவர்.

