கடந்த ஜனவரி மாதம் முதல், வேலை வாய்ப்பு என்ற போர்வையில் கிட்டத்தட்ட 219 பேரின் சிங்பாஸ் விவரங்களைத் திருடிய மோசடிக்காரர்கள், அவற்றைப் பயன்படுத்தி வங்கிக் கணக்குகளைத் திறந்ததாகக் காவல்துறை கூறியுள்ளது.
மே 17ஆம் தேதி அந்தத் தகவலை வெளியிட்ட காவல்துறை, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மார்ச் மாதத்திற்குப் பிறகு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்திருப்பதாகக் கூறியது.
இத்தகைய மோசடியில் 47 பேர் பாதிக்கப்பட்டதாக மார்ச்சில் தெரிவிக்கப்பட்டது.
மோசடிக்காரர்கள், போலியான வேலை வாய்ப்புகள் குறித்து இணையத்திலோ டெலிகிராம், வாட்ஸ்அப் போன்ற தளங்கள் மூலமாகவோ பதிவிடுவர்.
விண்ணப்பதாரர்களின் பின்புலத்தைச் சோதிக்க ஏதுவாக அவர்களின் தனிப்பட்ட விவரங்களைப் பெறுவதற்கு, சிங்பாசுக்கான கியூஆர் குறியீடுகளை அவர்கள் அனுப்புவர்.
அதைப் பின்பற்றி சிங்பாஸ் விவரங்களைப் பெறுவதற்கு அனுமதி அளித்தோர், தங்கள் விவரங்களைப் பயன்படுத்தி வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டது குறித்துப் பின்னர் அறிந்துகொள்வர்.
வேறு சில சம்பவங்களில், மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டோரின் சிங்பாஸ் கணக்கில் பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை மாற்றியது தெரியவந்தது.
சிங்பாஸ் மறைச்சொற்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டியவை என்பதைப் பொதுமக்களுக்குக் காவல்துறை நினைவூட்டியது.
தொடர்புடைய செய்திகள்
நம்பகமான முதலாளிகள், சிங்பாஸ் விவரங்களையோ மறைச்சொற்களையோ தரும்படி விண்ணப்பதாரர்களிடம் கேட்கமாட்டார்கள் என்று அது குறிப்பிட்டது.

