உயரமான இடங்களிலிருந்து குப்பைப் போடுவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன

உயரமான இடங்களிலிருந்து குப்பைப் போடுவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன

2 mins read
e1a010cc-1f96-41b9-98e3-2f2daae4506a
புளோக் 4, லோரோங் லியு லியெனில் உயரமான இடத்தில் இருந்து குப்பைகள் வீசுவது தொடர்பான புகார்கள் தேசியச் சுற்றுப்புற வாரியத்திற்கு வந்தன. - படம்: என்இஏ

சிங்கப்பூரில் உயரமான இடங்களில் இருந்து குப்பைகளை வீசும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதாக தேசியச் சுற்றுப்புற வாரியம் (என்இஏ) சனிக்கிழமையன்று (மே 18) தெரிவித்தது.

2021ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஒவ்வோர் ஆண்டும் உயரமான இடங்களில் இருந்து குப்பை போடும் பிரச்சினை தொடர்பாகக் கிட்டத்தட்ட 29,000 புகார்களை விசாரித்ததாக வாரியம் கூறியது.

அதே காலகட்டத்தில், ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 2,500 கண்காணிப்புக் கருவிகளை வாரியம் பொருத்தியது.

மேலும், உயரமான இடங்களில் இருந்து குப்பைகளை வீசும் சம்பவங்களில் தொடர்புடையவர்கள்மீது கிட்டத்தட்ட 1,100 அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்றும் வாரியம் சொன்னது.

இத்தகைய அமலாக்க நடவடிக்கைகளில் உயரமான இடங்களில் இருந்து குப்பைகளைப் போடுபவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர். அவர்களுக்கு அபராதம், திருத்த வேலை உத்தரவு ஆகியவை தண்டனையாக விதிக்கப்படலாம்.

“குடியிருப்பு வீடுகளிலிருந்து குப்பையைத் தூக்கி எறிவது கடுமையான ஒரு குற்றம். பொதுமக்களுக்கு அதனால் ஆபத்து நேர்வதுடன் சுற்றுச்சூழல் அசுத்தமாகும். அத்துடன் பொதுச் சுகாதாரமும் பாதிப்புக்கு உள்ளாகும்,” என்றது வாரியம்.

அண்மையில், புளோக் 4 லோரோங் லியு லியென் பகுதியில் நடந்த சம்பவத்தை வாரியம் சுட்டிக்காட்டியது.

இந்த புளோக்கில் உயரமான இடத்திலிருந்து குப்பைகள் வீசப்படுவதாகப் புகார்கள் வந்தன என்றும் அதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டன என்றும் வாரியம் கூறியது.

விசாரணை முடுக்கிவிடப்பட்ட ஒரே வாரத்திற்குள் அந்தச் சம்பவத்தில் தொடர்புடையவரை அடையாளம் கண்டு, அந்தக் குடியிருப்பின் உரிமையாளர்களுக்கு வாரியம் எச்சரிக்கை கடிதம் வழங்கியது.

2020ஆம் ஆண்டு முதல் உயரமான இடங்களில் இருந்து குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கும் நோக்கில், இச்சம்பவத்தில் பிடிபட்டவர்கள் தொடர்பான புள்ளிவிவரங்களும் வாரியம் மேற்கொண்டுவரும் கண்காணிப்பு நடவடிக்கைகள் பற்றிய தகவல்களும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் புளோக்களில் அமைக்கப்பட்டிருக்கும் வாரியத்தின் அறிவிப்புப் பதாகையில் இடம்பெறச் செய்வது போன்ற செயற்பாடுகளை வாரியம் மேற்கொண்டுவருகிறது.

குறிப்புச் சொற்கள்