சிங்கப்பூர் புதிய கொவிட்-19 அலையை எதிர்நோக்குவதாகவும் அண்மையில் தடுப்பூசி போடாத எல்லாரும், குறிப்பாக மூத்தோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள பரிந்துரைக்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்து உள்ளார்.
கடந்த இரு வாரங்களாக புதிய தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து இருப்பதாக அவர் சனிக்கிழமை (மே 18) கூறினார்.
“புதிய கிருமி அலை படிப்படியாக அதிகரித்துச் செல்லக்கூடிய ஆரம்பக்கட்டத்தில் நாம் உள்ளோம்.
“அடுத்த இரண்டு அல்லது நான்கு வாரங்களில் அதன் எண்ணிக்கை மேலும் அதிகரித்து உச்சத்தைத் தொடலாம்.
“அதாவது, ஜூன் மாதம் நடுப்பகுதி தொடங்கி இறுதி வரை அந்நிலை ஏற்படலாம்,” என்று திரு ஓங் தெரிவித்தார்.
அதனால், 60 வயதைக் கடந்தோர் உட்பட கடுமையான நோய்க்கு ஆளாகக்கூடிய அதிக ஆபத்தில் இருப்போர், மருத்துவ ரீதியாக பாதிப்புக்கு ஆளாகக்கூடியோர், மூத்தோர் பராமரிப்பு இல்லங்களில் தங்கி இருப்போர் போன்றவர்கள் கடந்த 12 மாதங்களில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை எனில் உடனடியாக தடுப்பூசிப் போட்டுக்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தி உள்ளார்.
இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனை படுக்கைகளைத் தயாராக வைத்திருக்கும்படி பொது மருத்துவமனைகள் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்து உள்ளது.
அதற்கேற்ப, அவசரமற்ற அறுவை சிகிச்சைகளைக் குறைக்குமாறும் இடமாற்றத்திற்குப் பொருந்தக்கூடிய நோயாளிகளை இடைக்காலப் பராமரிப்பு நிலையங்கள் போன்றவற்றுக்கு அனுப்புமாறும் மருத்துவமனைகள் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளதாக அமைச்சு கூறியது.
தொடர்புடைய செய்திகள்
இல்லத்திலேயே உள்நோயாளிப் பராமரிப்பு வழங்கக்கூடிய ஏற்பாட்டின்கீழ், தகுதியுள்ள நோயாளிகளை வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறும் அவற்றுக்கு அமைச்சு தெரிவித்து உள்ளது.
மேலும், கொவிட்-19 நிலவரத்தையும் அது விளக்கி உள்ளது.
மே 5 முதல் மே 11 வரையிலான வாரத்தில் கொவிட்-19 சம்பவங்கள் அதிகரித்து 25,900 என்று பதிவானதாக அது தெரிவித்து உள்ளது. அதற்கு முந்திய வாரத்தில் அந்த எண்ணிக்கை 13,700 ஆக இருந்தது.
அத்துடன், கொவிட்-19 தொற்றுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் அன்றாட சராசரி எண்ணிக்கையும் 181லிருந்து 250க்கு அதிகரித்து உள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 2லிருந்து 3க்கு அதிகரித்ததாகவும் அமைச்சு கூறியுள்ளது.
அது பற்றி விளக்கிய அமைச்சர் ஓங், “மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகி 500க்கு அதிகரித்தால் அதனை நம்மால் சமாளிக்க இயலும்.
“அந்த எண்ணிக்கை அதன் பிறகும் இரட்டிப்பாகி 1,000க்குச் சென்றால் அது நமது சுகாதார முறையில் குறிப்பிடத்தக்க சுமையை ஏற்படுத்தும்,” என்றார்.
“ஓராயிரம் மருத்துவப் படுக்கைகள் என்பது ஒரு வட்டார மருத்துவமனைக்குச் சமம். எனவே, அடுத்து நிகழவிருப்பவைக்காக நாம் நம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.