வெற்றிப் பாதையில் ‘ஹெல்தியர் எஸ்ஜி’: இதுவரை 890,000 பேர் பதிவு

வெற்றிப் பாதையில் ‘ஹெல்தியர் எஸ்ஜி’: இதுவரை 890,000 பேர் பதிவு

1 mins read
033d2409-7b4e-43ad-ace7-42ae1062ff18
துடிப்புடன் மூப்படைதல் தொடர்பாக சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற சுகாதார அமைச்சர் ஓங் யி காங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நோய் முன்தடுப்புப் பராமரிப்புத் திட்டமான ‘ஹெல்தியர் எஸ்ஜி’ 2023 ஜூலையில் தொடங்கப்பட்டது முதல் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்து உள்ளார்.

அந்தத் திட்டத்தில் பங்கேற்க இதுவரை ஏறக்குறைய 890,000 பேர் பதிவு செய்துள்ளதாகவும் இதில் மலாய் சமூகம் இன்னும் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

நாடளவில் 40 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோரில் 37 விழுக்காட்டினர் அத்திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.

அதேநேரம், மலாய் சமூகத்தில் தகுதியுள்ளோர் பதிவு செய்துள்ள விகிதம் 30 விழுக்காடு. இது தேசிய சராசரி அளவைக் காட்டிலும் குறைவு.

அதற்கான காரணத்தை, ஒருங்கிணைந்த பராமரிப்பு முகவையின் தலைமை நிர்வாகி தினேஷ் வாசு தாஸ் விளக்கினார்.

மலாய் சமூகத்தினரிடையே காணப்படும் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றின் விகிதம் தேசிய சராசரியைக் காட்டிலும் அதிகமாக இருப்பது, ஹெல்தியர் எஸ்ஜி திட்டத்தில் அவர்கள் அதிகமாகப் பதிவு செய்யாததற்குக் காரணமாக இருக்கலாம் என்றார் அவர்.

உதாரணத்திற்கு, நீரிழிவுக்கான தேசிய சராசரி விகிதம் 8.5 விழுக்காடு. ஆனால், மலாய் சமூகத்தினரிடையே அந்த விகிதம் 12.9 விழுக்காடாக உள்ளது என்றார் திரு தினேஷ்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்