மூத்த அமைச்சர் லீ: கல்வியறிவுடன் பன்முக ஆற்றலும் வலிமையும் முக்கியம்

மூத்த அமைச்சர் லீ: கல்வியறிவுடன் பன்முக ஆற்றலும் வலிமையும் முக்கியம்

2 mins read
ded49887-f0e1-4a70-bb07-b1a51521f868
டெக் கீ குடியிருப்பாளர் ஆலோசனைக் குழு - சமூக மேம்பாட்டு மன்றம் கல்வித் தகுதி விருது நிகழ்ச்சியில் மூத்த அமைச்சர் லீ உரையாற்றினார். 360 தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, தொடக்கக்கல்லூரி மாணவர்கள் ஆகியோருக்கு விருதுகளும் நூல் பற்றுச்சீட்டுகளும் வழங்கப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

கல்வியில் மட்டும் கவனம் செலுத்தும் மனப்போக்கை மாணவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். கல்வியறிவுடன் வாழ்க்கைக்குத் தேவையான பல ஆற்றல்களை வளர்த்துக்கொள்வதற்கும் மாணவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அதுமட்டுமல்லாது, வாழ்வில் வலிமைமிக்கவர்களாகவும் திகழ வேண்டும் என்று அவர் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

மற்றவர்களை உயர்த்திவிடும் ஆற்றலைக் கொண்டவராகவும் சவால்களை முறியடிக்கக்கூடியவராகவும் இருக்க வேண்டும் என்றார் அவர்.

“கல்வியில் சிறப்பாகச் செயல்படுவது முக்கியம். ஆனால் உங்களைப் பல ஆற்றல்களைக் கொண்ட முழுமையான நபராக்க முயற்சி செய்கிறோம்,” என்று தமது தொகுதியில் நடைபெற்ற கல்வித் தகுதி விருதளிப்பு நிகழ்ச்சியில் மாணவர்களிடம் தெரிவித்தார் திரு லீ.

“புத்தகத்தில் உள்ளவற்றைக் கரைத்துக்குடிப்பது மட்டும் முக்கியமல்ல. ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் பட்டதாரிகளானதும் படித்தது அனைத்தையும் நினைவில் வைத்திருப்பது சாத்தியமன்று.

“நல்ல குணமுடையவராக இருப்பது மிகவும் அவசியம். நண்பர்கள், அண்டைவீட்டார் ஆகியோருக்கு உதவி செய்யக்கூடியவராக இருக்க வேண்டும். சவால்களைச் சமாளிக்கக்கூடியவராகவும் பின்னடைவுகளிலிருந்து மீண்டு வரக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்,” என்று திரு லீ மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.

டெக் கீ குடியிருப்பாளர் ஆலோசனைக் குழு - சமூக மேம்பாட்டு மன்றம் கல்வித் தகுதி விருது நிகழ்ச்சியில் மூத்த அமைச்சர் லீ உரையாற்றினார்.

இந்த நிகழ்வு மே 19ஆம் தேதியன்று அங் மோ கியோ தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.

மூத்த அமைச்சர் லீயின் டெக் கீ தொகுதியில் வசிக்கும் 360 தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, தொடக்கக்கல்லூரி மாணவர்கள் ஆகியோருக்கு விருதுகளும் புத்தகப் பற்றுச்சீட்டுகளும் வழங்கப்பட்டன.

பிரதமர் பதவியிலிருந்து விலகி மூத்த அமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகு, இதுவே திரு லீ கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி.

மாணவர்களுக்குக் குறிப்பிட்ட அளவிலான வலிமை இருப்பது மிகவும் முக்கியம் என்று திரு லீ வலியுறுத்தினார்.

“நீங்கள் கீழே விழுந்து அழும்போது உங்களை அன்புடன் பராமரிக்கிறோம். ஆனால் அதே சமயம், சவால்களை எதிர்கொண்டால் நீங்களே அவற்றிலிருந்து மீண்டு வர வேண்டும். தொடர்ந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும். எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்கும்,” என்றார் திரு லீ.

வாழ்வில் முன்னேறுவதற்குப் பல வழிகள் இருப்பதைத் திரு லீ சுட்டினார். தங்கள் பலங்களைக் கண்டறிந்து அதன்வழி வாழ்வில் சிறக்க சிங்கப்பூரில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அணுகுமுறை மாணவர்களுக்கு உதவியாக இருப்பதாக திரு லீ கூறினார்.

குறிப்புச் சொற்கள்
லீ சியன் லூங்மாணவர்கள்