தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரசு ஊழியரிடம் பொய்யுரைத்த வெளியுறவு அமைச்சின் தலைமை இயக்குநருக்குச் சிறை

2 mins read
7b12fe75-c7cd-4031-b403-ab2a7bec5196
சொந்த விவகாரங்களுக்காக அரசதந்திர பயணப் பெட்டிச் சேவையைப் பயன்படுத்திய கில்பர்ட் ஓ ஹின் குவான். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அரசந்திரப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் பயணப் பெட்டி சலுகை தொடர்பாக அரசாங்க ஊழியரிடம் பொய்த் தகவல் அளித்த வெளியுறவு அமைச்சின் தலைமை இயக்குநருக்கு மே 20ஆம் தேதியன்று ஒரு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

2023ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதியன்று வெளியுறவு அமைச்சின் அப்போதைய நிர்வாகப் பிரிவின் துணைச் செயலாளரான திரு ஓங் எங் சுவானிடம் பொய் சொன்னதை 45 வயது கில்பர்ட் ஓ ஹின் குவான் ஏப்ரல் மாதம் ஒப்புக்கொண்டார்.

வெளிநாடுகளில் இருக்கும் சிங்கப்பூர் தூதரகங்கள் போன்ற வெளியுறவு அமைச்சின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் அலுவலகங்களுக்கு அரசதந்திரப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் பயணப் பெட்டிகள் மூலம் அதிகாரபூர்வ ஆவணங்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன.

அவை முத்திரையிடப்பட்டு பூட்டப்பட்டிருக்கும். இப்பயணப் பெட்டிகளைத் திறந்து சோதனையிட வெளிநாட்டு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை.

இந்நிலையில், தமது பதவியை ஓ தவறான முறையில் பயன்படுத்தி அரசதந்திர பயணப் பெட்டிகளில் விலை உயர்ந்த 21 கைக்கடிகாரங்கள், ஒரு மோதிரம், சிறுவர்களுக்கான ஏழு புத்தகங்கள் ஆகியவற்றை வைத்து அனுப்ப ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது.

2023ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதியன்று அப்போது சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தில் பணியாற்றிய திரு டியோன் லோக் செங் வாங்குடன் ஓ தொடர்புகொண்டார்.

சீன அரசதந்திரி ஒருவரின் பெற்றோர் தமக்குச் சில பொருள்களை அனுப்பிவைக்க விரும்புவதாகவும் அவற்றை அரசதந்திர பயணப் பெட்டிச் சேவை மூலம் சிங்கப்பூருக்கு அனுப்பிவைக்குமாறும் திரு லோக்கை ஓ கேட்டுக்கொண்டார்.

ஆனால் அந்த அரசதந்திர பயணப் பெட்டிக்குள் அதிகாரபூர்வ ஆவணங்கள் இல்லை என்று திரு லோக்கிற்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

மாறாக, சீனாவைச் சேர்ந்த தோழி ஒருவருக்கு உதவ ஓ இவ்வாறு செய்ததாகத் தெரியவந்தது.

தமது சொந்த விவகாரங்களுக்காக அரசதந்திர பயணப் பெட்டிச் சேவையை ஓ பயன்படுத்தியது தெரியாமல் அவற்றைத் திரு லோக் பெய்ஜிங்கிலிருந்து சிங்கப்பூருக்குக் கொண்டு வந்தார்.

2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதியன்று திரு லோக் பெய்ஜிங்கிலிருந்து சிங்கப்பூருக்கு விமானம் மூலம் வந்தார்.

சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அவரிடம் இருந்த அரசதந்திர பயணப் பெட்டியைச் சோதனையிட்டபோது அதில் ஆவணங்களுக்குப் பதிலாக விலை உயர்ந்த பொருள்கள் இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

திரு லோக் நடந்தவற்றை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து சிங்கப்பூர் காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டது.

2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் தேதியன்று இந்த விவகாரம் குறித்து எழுத்துபூர்வ விளக்கம் தருமாறு திரு ஓங், ஓவிடம் கேட்டுக்கொண்டார்.

அரசதந்திர பயணப் பெட்டியில் இருந்த கைக்கடிகாரம் தமது தந்தைக்குச் சொந்தமானவை என்று ஓ பொய் கூறினார்.

இதுகுறித்து லஞ்ச, ஊழல் புலன்விசாரணைப் பிரிவு விசாரணை நடத்தியது.

இதையடுத்து, தாம் பொய் கூறியதை ஓ ஒப்புக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்