வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஜூன் 15 முதல் பார்வையிடலாம்

வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஜூன் 15 முதல் பார்வையிடலாம்

2 mins read
3d7859ab-da66-41fb-93c9-603cad96b260
தேர்தல் துறை. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் ஜூன் மாதம் அந்தப் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்றும் தேர்தல் துறை தெரிவித்து உள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கல், சேர்த்தல் போன்ற திருத்தங்களை ஜூலை 31ஆம் தேதிக்குள் செய்து முடிக்குமாறு வாக்குப்பதிவு அதிகாரியை பிரதமர் லாரன்ஸ் வோங் கேட்டுக்கொண்டு இருப்பதாக தேர்தல் துறை திங்கட்கிழமை (மே 20) தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

ஜூன் 1ஆம் தேதியன்று தகுதி பெற்றிருப்போரின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடும் என்று அது கூறி உள்ளது.

வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு அல்லது திருத்தம் என்பது அண்மைய நிலவரங்களை அதில் உள்ளடக்குவதாகும்.

2024 ஜூன் 1ஆம் தேதியன்று வாக்களிக்கத் தகுதிபெறும் எல்லா சிங்கப்பூரர்களும் அந்தப் பட்டியலில் சேர்க்கப்படுவர்.

சிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2025 நவம்பருக்குள் நடத்தப்பட இருக்கும் நிலையில் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படுகிறது.

2023 ஜூன் 1ஆம் தேதியன்று 21 வயதைத் தொடும் சிங்கப்பூரர்களும் பட்டியலில் சேர்க்கப்படுவர். மேலும், அந்தத் தேதியில் சிங்கப்பூர் குடிமக்கள் ஆன புதிய குடியேறிகளும் வாக்காளர் தகுதிபெறுவர்.

சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு வாக்களிப்புப் பிரிவிலும் வாக்காளர் பட்டியல் இருக்கும். அந்தப் பட்டியல்களில் சிங்கப்பூரின் எல்லா 31 குழுத் தொகுதிகளிலும் எல்லா தனித்தொகுதிகளிலும் வாக்களிக்கத் தகுதிபெறுவோரின் பெயர்கள் இருக்கும்.

ஆகக் கடைசியாக, 2023 ஜூன் 1ஆம் தேதி வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டது. தற்போது திருத்தப்படும் பட்டியல் ஜூன் 15 முதல் ஜூன் 28 வரை இருவார காலத்திற்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்று தேர்தல் துறை அறிவித்து உள்ளது.

2023 ஜூலை 20ஆம் தேதி நிலவரப்படி, சிங்கப்பூரில் 2,709,455 வாக்காளர்கள் இருந்தனர். இது, 2020 பொதுத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்று இருந்த 2,653,942 என்ற எண்ணிக்கையைக் காட்டிலும் ஏறக்குறைய 55,000 பேர் அதிகம்.

குறிப்புச் சொற்கள்