மருந்துத் தயாரிப்பு நிறுவனமான ஆஸ்ட்ராஸெனக்கா, சிங்கப்பூரில் இரண்டு பில்லியன் வெள்ளியில் புதிய தயாரிப்பு ஆலையை நிறுவத் திட்டமிடுவதாக மே 20ஆம் தேதி தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு (2024) இறுதிக்குள் அதற்கான வடிவமைப்பு, கட்டுமானப் பணிகளைத் தொடங்கவிருப்பதாகவும் 2029ஆம் ஆண்டுக்குள் அந்த ஆலை செயல்படத் தொடங்கும் என்றும் அது கூறியது.
சிங்கப்பூரில் அமையவிருக்கும் புதிய ஆலை, ‘ஏடிசி’ எனப்படும் புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளைத் தயாரிக்கும் வகையில் வடிவமைக்கப்படும் என்றும் உலகளாவிய நிலையில் நிறுவனத்தின் அத்தகைய மருந்து விநியோகத்தை மேம்படுத்த உதவும் என்றும் ஆஸ்ட்ராஸெனக்கா கூறியது.
‘ஏடிசி’ மருந்துத் தயாரிப்பின் அனைத்து நிலைகளையும் உள்ளடக்கிய முழுமையான உற்பத்தி ஆலையாக விளங்கும் இது, ஆஸ்ட்ராஸெனக்கா நிறுவனத்தின் இத்தகைய முதல் ஆலையாகும்.
சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகம் இந்த ஆலையை அமைப்பதற்கு ஆதரவு வழங்குகிறது.
சிங்கப்பூரில் முதல் ஆலையை அமைப்பது தொடர்பிலான ஆஸ்ட்ராஸெனக்காவின் முடிவை வரவேற்பதாகக் கழகத்தின் தலைவர் பிங் சியோங் பூன் கூறினார்.
“இந்த முதலீடு, சிங்கப்பூரின் உயிரியல்மருந்துத் தயாரிப்புத் திறன் மீதான நம்பிக்கையைக் காட்டுகிறது. துல்லிய மருந்துகளை மேம்படுத்தி, உற்பத்தி செய்யும் ஆற்றலை வலுப்படுத்த உதவுகிறது. அர்த்தமுள்ள வேலைகளை உருவாக்கி, சிங்கப்பூருக்கு பொருளியல் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது,” என்றார் அவர்.
ஏற்கெனவே ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசிய-பசிபிக் வட்டாரம் ஆகியவற்றில் செயல்பட்டுவரும் ஆஸ்ட்ராஸெனக்கா, ஏறத்தாழ 89,000 ஊழியர்களைக் கொண்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“உலக அளவில் முதலீடுகளை ஆக அதிகம் ஈர்க்கும் நாடுகளில் சிங்கப்பூரும் அடங்கும். சிக்கலான உற்பத்தி நடைமுறைகளை மேற்கொள்வதில் உன்னதம் பெற்றுள்ள சிங்கப்பூரில் புதிய ஆலையை அமைப்பதில் பெருமை கொள்கிறோம்,” என்று ஆஸ்ட்ராஸெனக்காவின் தலைமை நிர்வாகி பாஸ்கல் சோரியோட் கூறினார்.
புதிய ஆலை செயல்படத் தொடங்கும் முதல் நாளிலிருந்தே, கரிம வெளியேற்றம் அறவே இல்லாத வகையில் வடிவமைக்கப்படும் என்றார் அவர்.

