காயமடைந்த தமது வளர்ப்பு நாயை சிகிச்சைக்குக் கொண்டு செல்லாத ஆடவர் ஒருவருக்கு $4,500 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
கோர் லியன் ஹுவாட், 61, எனப்படும் அவர், ஓராண்டு காலத்திற்கு எந்த ஒரு விலங்கையும் வைத்திருக்கக்கூடாது என்ற தடையும் விதிக்கப்பட்டு உள்ளது.
2021 ஜூலைக்கும் ஆகஸ்ட்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் வளர்த்து வந்த பழுப்புநிற பெண் நாயின் வலது காலில் சிறிய காயம் ஏற்பட்டு இருந்ததாக தேசிய பூங்காக் கழக அதிகாரி லிம் சோங் ஹுயி தெரிவித்தார்.
காயத்திற்கு மருந்து தடவிய கோர், நாயை புலாவ் உபின் தீவில் உள்ள ஒருவரிடம் விட்டுச் சென்றார். 2021 ஆகஸ்ட்டில் ஒரு நாள் அவர் புலாவ் உபின் சென்று பார்த்தபோது காயம் பெரிதாகி அதில் புழுக்கள் காணப்பட்டன.
சிகிச்சைக்காக விலங்குநல மருத்துவமனைக்கு நாயைக் கொண்டு செல்வதற்குப் பதில் காயத்திற்கு அவரே மருந்து போட்டார். பின்னர் அவர் சென்றுவிட்டார்.
ஒருவழியாக, ‘நமது தெருநாய்களைப் பாதுகாப்போம்’ என்னும் விலங்குநல அமைப்பின் உதவியோடு அந்த நாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
நாய்க்கு தேவையற்ற வலியையும் துன்பத்தையும் ஏற்படுத்தும் செயலைச் செய்து, நியாயமற்ற முறையில் நடந்துகொண்டதாக கோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.