மலேசியாவிலிருந்து தருவிக்கப்படும் பிபிக்’ஸ் சாய்ஸ் ஃபிஷ் நகெட்டுகளைத் திரும்பப் பெற சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
மே 20ஆம் தேதி, அமைப்பு அவ்வாறு உத்தரவிட்டது.
பிபிக்’ஸ் சாய்ஸ் ஃபிஷ் நகெட் (400 கிராம்) பொட்டலங்களைச் சோதனையிட்டபோது அதில் ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய முட்டை கலந்திருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் பொட்டலத்தில் அதுகுறித்துக் குறிப்பிடப்படவில்லை.
எனவே அவற்றைத் திரும்பப் பெறும்படி, இறக்குமதி நிறுவனமான சின் லி-ஹின் ஃப்ரோஸன் ஃபுட்டுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைப்பு தெரிவித்தது.
சிங்கப்பூரின் உணவு விதிமுறைகளின்கீழ், ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய பொருள்களைப் பொட்டலங்களில் குறிப்பிட வேண்டியது கட்டாயம்.
ஒவ்வாமையால் பாதிக்கப்படக்கூடிய வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பது இதன் நோக்கம்.
“அதேபோல், ஓர் உணவில் இடம்பெறும் அனைத்துப் பொருள்களும் அவற்றின் எடைக்கு ஏற்ப, அதிக எடை முதல் குறைவான எடை வரை என்ற முறையில், பொட்டலத்தில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்,” என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியது.
பாதிக்கப்பட்ட ஃபிஷ் நக்கெட் பொட்டலங்களை வாங்கியோர், முட்டையால் ஒவ்வாமை ஏற்படக்கூடியவர்கள் என்றால், அந்த நக்கெட்களை உண்ண வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
ஒருவேளை ஏற்கெனவே உண்டிருந்தால், உடல்நலம் குறித்துக் கவலைப்படுவோர் மருத்துவரை நாடும்படி அமைப்பு ஆலோசனை கூறியுள்ளது.
மேல்விவரங்களுக்கு வாடிக்கையாளர்கள் தாங்கள் அந்த நக்கெட்களை வாங்கிய கடைகளை நாடலாம்.

