சிங்கப்பூரில் சென்ற ஆண்டு (2023) உள்ளூர் காய்கறி, கடலுணவு உற்பத்தி சரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்கறிப் பண்ணைகளின் எண்ணிக்கை அதிகரித்தபோதும் அவற்றின் விளைச்சல் குறைந்தது. இருப்பினும் உள்ளூர் முட்டை உற்பத்தி அதிகரித்தது.
சிங்கப்பூர் உணவு அமைப்பு, மே 20ஆம் தேதி வெளியிட்ட உணவுப் புள்ளிவிவரங்கள் அடங்கிய ஆண்டறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
உணவுத் துறை, கொவிட்-19 கிருமித்தொற்றால் பண்ணைகளின் கட்டுமானம் தொடர்பில் சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது. மேலும், பணவீக்க நெருக்கடி, எரிசக்திக் கட்டண உயர்வு, மனிதவளச் செலவு ஆகியவற்றாலும் பாதிக்கப்பட்டது என்று அமைப்பு குறிப்பிட்டது.
சென்ற ஆண்டு சிங்கப்பூரின் மொத்த உணவுப் பயன்பாட்டில் 3.2 விழுக்காடு உள்ளூரில் விளைந்த காய்கறிகள். ஒப்புநோக்க, 2022ஆம் ஆண்டு அது 3.9 விழுக்காடாக இருந்தது.
கடலுணவு உற்பத்தி 2023ல் 7.3 விழுக்காடாகப் பதிவானது. 2022ஆம் ஆண்டைவிட அது 0.3 விழுக்காடு குறைவு என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியது.
சென்ற ஆண்டு உள்ளூர் காய்கறிப் பண்ணைகளின் எண்ணிக்கை 115 ஆகும். முந்தைய ஆண்டு இந்த எண்ணிக்கை 111 ஆக இருந்தது.
கடலில் அமைக்கப்பட்ட கடலுணவுப் பண்ணைகளின் எண்ணிக்கை சென்ற ஆண்டு குறைந்தது. இருப்பினும் நிலத்தில் அமைக்கப்பட்ட கடலுணவுப் பண்ணைகளின் எண்ணிக்கை அதிகரித்ததாகக் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் வேளாண் துறை வேறு சில சிக்கல்களையும் எதிர்கொள்கிறது.
லிம் சூ காங்கில் சிங்கப்பூரின் ஆகப் பெரிய உள்ளரங்கப் பண்ணையை அமைக்கும் திட்டத்தைக் கைவிட்டது வெர்டிவெஜிஸ் நிறுவனம். இத்திட்டத்தில் கூட்டுப் பங்காளியாக இருந்த சீன வேளாண் நிறுவனத்துடன் பிரச்சினை ஏற்பட்டது அதற்குக் காரணம்.
எனவே, 2022 ஏப்ரலில் அது இரண்டு ஹெக்டர் நிலத்தை சிங்கப்பூர் உணவு அமைப்பிடம் திரும்ப ஒப்படைத்தது. இந்த நிறுவனம் அன்றாடம் ஆறு டன் காய்கறிகளை உற்பத்தி செய்ய இலக்கு கொண்டிருந்தது.
மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பாராமுண்டி குழுமம் சிங்கப்பூரிலிருந்து வெளியேற முடிவெடுத்திருப்பதால், தெற்கு நீர்ப்பரப்பில் மீன் வளர்ப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்தத் திட்டமிருப்பதாக அமைப்பு கூறியது.
தற்போது 90 விழுக்காட்டு உணவை இறக்குமதி செய்யும் சிங்கப்பூர், 2030க்குள் அதன் ஊட்டச்சத்துத் தேவையில் 30 விழுக்காட்டை உள்ளூரிலேயே உற்பத்தி செய்ய இலக்கு கொண்டுள்ளது.

