சிங்கப்பூரில் பதிவாகியுள்ள $3 பில்லியன் பணமோசடி தொடர்பான வழக்கில் பெண் ஒருவர் மீது புதிதாக ஏழு குற்றச்சாட்டுகள் மே 21ஆம் தேதியன்று சுமத்தப்பட்டன.
போலி ஆவணங்களைப் பயன்படுத்தியது, குற்றச் செயல்கள் மூலம் பெறப்பட்டவற்றை வைத்திருந்தது ஆகியவை அவற்றில் அடங்கும்.
சீன நாட்டவரான 44 வயது லின் பாவ்யிங் மொத்தம் 10 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
விசாரணைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டும் அதில் அடங்கும்.
லின் குற்றத்தை ஒப்புக்கொள்வதற்கான தேதியை நீதிமன்றத்திடம் கேட்க இருப்பதாக அவரது வழக்கறிஞர் கூறினார்.
குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ள கூடிய விரைவில் நீதிமன்றத்தில் முன்னிலையாக விரும்புவதாக லின் தெரிவித்தார்.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய குற்றம் தொடர்பாக 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட 10 வெளிநாட்டினரில் லின்னும் ஒருவர்.
ஒரு புதிய மோசடிக் குற்றச்சாட்டும், போலியான ஆவணங்களைப் பயன்படுத்தியதாக இரண்டு குற்றச்சாட்டுகளும், குற்றவியல் நடத்தையின் மூலம் கிடைத்த பலன்களைப் பெற்றதாக நான்கு குற்றச்சாட்டுகளும் லின் மீது செவ்வாய்க்கிழமை (மே 21) சுமத்தப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
லின்னும் அதிரடிச் சோதனையின்போது கைது செய்யப்பட்ட ஸாங் ருய்ஜின், 45, என்பவரும் காதலர்கள் என இதற்கு முந்திய நீதிமன்ற விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.
செந்தோசா கோவ் பகுதியின் பெர்ல் தீவில் உள்ள பங்களா வீட்டில் அவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்படுவதற்கு முன்பு, ஸாங்குடன் லின் செந்தோசாவில் வசித்து வந்தார். அவருடைய 15 வயது மகள், பீச் ரோட்டில் பணிப்பெண் ஒருவருடன் வசித்தார்.
லின்னும் ஸாங்கும் அதிகாரபூர்வமாக திருமணம் செய்துகொள்ளவில்லை என்றாலும், ஸாங்கை தம்முடைய கணவர் என லிங் அழைக்கிறார்.