கோலாலம்பூர்: சிங்கப்பூர் நகைச்சுவைக் கலைஞரான ஷாருல் சன்னா மலேசியாவில் நிகழ்ச்சி படைப்பதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது தொடர்பில் அந்நாட்டுத் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் விளக்கமளித்துள்ளார்.
பெட்டாலிங் ஜெயாவில் படைக்கப்படவிருந்த ‘ஜஸ்ட் ஜோக்கிங்’ எனும் நிகழ்ச்சிக்கான அனுமதி, அது நடைபெறுவதற்கு இரண்டு நாள் முன்னதாக ரத்து செய்யப்பட்டது.
“திருவாட்டி ஷாருல் சன்னாவின் பழைய காணொளி ஒன்று ‘திரீஆர்’ எனப்படும் இனம், சமயம், அரச குடும்பம் ஆகிய அம்சங்கள் தொடர்பான விவகாரங்களில் தொடர்புபடுத்தப் பட்டுள்ளதாகக் காவல்துறையிடம் பலர் புகாரளித்தனர்.
“அதைக் கருத்தில்கொண்டு, ‘புஸ்பால்’ எனப்படும் வெளிநாட்டுக் கலைஞர்கள் நிகழ்ச்சி படைப்பதற்கு அனுமதி வழங்கும் மத்திய அமைப்பு அவருக்கான அனுமதியை ரத்து செய்தது.
“அக்காணொளி பழையது என்றாலும் அது ‘திரீஆர்’ விவகாரங்களுடன் தொடர்புடையது எனப் புகாரளிக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்ததன் அடிப்படையில் ‘புஸ்பால்’ அமைப்பு அனுமதியை ரத்து செய்துள்ளது,” என்று மே 20ஆம் தேதி செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறினார்.

