சிங்கப்பூரின் தனியார் வீடுகள் ஆசிய பசிபிக் வட்டாரத்திலேயே ஆக அதிக விலையுள்ளவையாகத் தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தனியார் வீட்டு விலைகள் ஹாங்காங், சிட்னி போன்ற நகரங்களைக் காட்டிலும் அதிகமாக இருப்பதாக நகர நில ஆய்வுக் கழகம் (யுஎல்ஐ) செவ்வாய்க்கிழமை (மே 21) தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
11 நாடுகளைச் சேர்ந்த 48 நகரங்களில் சிங்கப்பூரின் தனியார் வீட்டு விலைகளே அதிகம் என்றும் அது தெரிவித்து உள்ளது.
சிங்கப்பூர் தனியார் வீடுகளின் இடைநிலை விலை US$1.32 மில்லியனாக உள்ளது.
இது ஓராண்டுக்கு முன்னர் இருந்த விலையைக் காட்டிலும் 8.4 விழுக்காடு அதிகம்.
தனியார் வீடுகளை வாங்க குடியேறிகள் அதிக ஆர்வம் காட்டுவதன் காரணமாக விலைகள் ஏறி இருக்கலாம் என்று யுஎல்ஐ கூறியது.
மாறாக, ஹாங்காங்கில் தனியார் வீட்டு விலைகள் சரிந்துள்ளன. அதன் மக்கள்தொகையில் குறிப்பிட்டத்தக்க வெளியேற்றம் நடைபெற்றது அதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
அந்தச் சரிவு காரணமாக ஹாங்காங் தனியார் வீடுகளின் இடைநிலை விலை US$1.16 மில்லியனுக்கு இறங்கி உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதேபோல, ஹாங்காங்கை அடுத்து உள்ள ஆகப் பெரிய சொத்துச் சந்தையான ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் தனியார் வீட்டு இடைநிலை விலை US$1.06 மில்லியன் என்று பதிவாகி உள்ளது.
தனியார் வீட்டைச் சொந்தமாக்கிக்கொள்ள சிங்கப்பூர் செலவுமிக்க நகராகத் தொடரும் வேளையில், வீடு வாங்கும் வெளிநாட்டினருக்கு 60 விழுக்காடு முத்திரை வரி விதிக்கப்பட்டது உள்ளிட்ட சொத்துச் சந்தைப் பதற்றத் தணிப்பு நடவடிக்கைகள் வெளிநாட்டினர் பலரை தோக்கியோ சொத்துச் சந்தையை நாடச் செய்துள்ளதாகவும் யுஎல்ஐ தெரிவித்தது.
அவர்கள் சீனாவைச் சேர்ந்த செல்வந்தர்கள் என்றும் சொத்து வாங்கும் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள சிங்கப்பூர் தங்களுக்கு ஏற்ற நகராகக் கருதுபவர்கள் அவர்கள் என்றும் அது அடையாளம் கண்டு உள்ளது.
அதேநேரம், வீடமைப்பு வளர்ச்சிச் கழக வீடுகளுக்கான இடைநிலை விலை கடந்த ஆண்டு US$461,289 ஆக அதிகரித்து. 2022ஆம் ஆண்டு அந்த விலை US$409,000 ஆக இருந்தது.
ஆசிய பசிபிக் வட்டாரத்தில் வீடு வாங்குவதைக் காட்டிலும் வாடகைக்குத் தங்கி இருப்பதே அதிகம் கட்டுப்படியாகக்கூடியது என்று பொதுவாகக் கருதப்படுவதாக யுஎல்ஐ தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

