இந்தோனீசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான விமானச் சேவைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யவும் பயணிகளுக்கான பயணப் புள்ளிகள் திட்டத்தை ஒன்றிணைந்து செயல்படுத்தவும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் கருடா இந்தோனீசியா நிறுவனமும் மே 20ல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்தப் பங்காளித்துவத் திட்டம் நடப்புக்கு வந்த பிறகு, கருடா மைல்ஸ் மற்றும் கிரிஸ்ஃபிளையர் உறுப்பினர்கள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கருடா இந்தோனீசியா ஆகியவற்றின் விமானங்களில் பயணம் செய்யும்போது புள்ளிகளைப் பெறுவதுடன் அவற்றைப் பயன்படுத்தி சலுகைகளையும் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பங்காளித்துவம் இந்தோனீசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்தும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கோ சூன் ஃபோங் கூறினார்.