செயற்கை நுண்ணறிவு நடைமுறைகளுடன் ஒருங்கிணைய சிங்கப்பூரில் உள்ள மேலும் அதிகமான சிறிய, நடுத்தர நிறுவனங்கள் உதவி பெற உள்ளன.
அதற்கேற்ப, மைக்ரோசாஃப்ட் நிறுவனம், என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு, ஏஐ சிங்கப்பூர் (ஏஐஎஸ்ஜி) என்னும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே புதிய பங்காளித்துவ உடன்பாடு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
அது குறித்த அறிவிப்பு செவ்வாய்க்கிழமை (மே 21) வெளியிடப்பட்டது.
மைக்ரோசாஃப்ட் தயாரித்துள்ள ‘மைக்ரோசாஃப்ட் கேப்பிலாட்’ என்னும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் உதவிக் கருவியை சிங்கப்பூரில் உள்ள 1,000க்கும் மேற்பட்ட சிறிய, நடுத்தர நிறுவனங்கள் தங்களது உற்பத்தித்திறனைப் பெருக்கப் பயன்படுத்த அந்தப் பங்காளித்துவம் கைகொடுக்கிறது.
கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அந்த உதவிக் கருவியை மைக்ரோசாஃப்ட் மென்பொருள்களான பவர் பாய்ண்ட், வேர்ட் போன்றவற்றில் பயன்படுத்த முடியும்.
மைக்ரோசாஃப்ட் கேப்பிலாட்’ உரிமம் பெறுவதற்கான செலவில் 50 விழுக்காட்டை இங்கு தகுதி உள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு 12 மாதத்திற்கு என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு வழங்கும்.
மேலும், தகுதி உள்ள நிறுவனம் ஒவ்வொன்றும் 50 உரிமங்களை சலுகை விலையில் பெற முடியும்.
செயற்கை நுண்ணறிவு திறன்களை உருவாக்குவதிலும் அதனைப் பொறுப்பான முறையில் பயன்படுத்துவது எவ்வாறு என்று கற்றுத்தருவதிலும் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பும் ஏஐ சிங்கப்பூர் (ஏஐஎஸ்ஜி) என்னும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், மின்னிலக்கரீதியாக பக்குவமடைந்த சிறிய, நடுத்தர நிறுவனங்களின் திறன்களை ஊக்குவிக்க தொடர்பு தகவல் ஊடக மேம்பாட்டு ஆணையத்துடன் தாம் கைகோத்து இருப்பதாகவும் மைக்ரோசாஃப்ட் அறிவித்து உள்ளது
அத்துடன், அடுத்த ஈராண்டுகளுக்கு வர்த்தகத் தேவைகளை அடையாளம் காண 200க்கும் மேற்பட்ட சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப ஆலோசனையை வழங்குவதோடு பயிற்சி வகுப்புகளையும் மைக்ரோசாஃப்ட் நடத்தும்.
சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான மைக்ரோசாஃப்ட் கேப்பிலாட் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய துணைப் பிரதமர் கான் கிம் யோங், செயற்கை நுண்ணறிவின் எழுச்சி நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் வாய்ப்புகளை அதிகப்படுத்தி இருப்பதாகக் குறிப்பிட்டார்.

