சிங்கப்பூரில் உள்ள ஏறக்குறைய 12,000 உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இவ்வாண்டின் இறுதிக்குள் நேரடி இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.
மாணவர்களிடம் பாரம்பரிய இசை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இசைக் கல்வியை வளர்க்க அவ்வாறு செய்யப்படுகிறது.
டெயி உயர்நிலைப் பள்ளியில் பாட்டு, இசை வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் ஹோ சி லியாங் தமது வகுப்பில் இருந்த 37 மாணவர்களில் எத்தனை பேரிடம் பாரம்பரிய இசை நிகழ்ச்சிக்குச் சென்ற அனுபவம் உள்ளது என்று வினவினார். அதற்கு ஒரு மாணவர் மட்டுமே கையை உயர்த்தினார்.
அவர், செவ்வாய்க்கிழமை (மே 21) உயர்நிலை 2ல் பயிலும் தமது மாணவர்களை விக்டோரியா இசை அரங்கில் நடைபெற்ற ஜேசன் லாய் இசை நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார்.
மாணவர்களிடம் இசை ஞானத்தை வளர்க்க பள்ளிகள் எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அந்த ஒரு மணி நேர இசை நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்றனர்.
இங்குள்ள 22 பள்ளிகளைச் சேர்ந்த உயர்நிலை மாணவர்கள் பல்வேறு அரங்குகளில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளுக்குச் செல்வார்கள்.
விக்டோரியா இசை அரங்கு, எஸ்பிளனேட் இசை அரங்கு, சிங்கப்பூர் மாநாட்டு அரங்கு, யோங் சியூ தோ இசை அரங்கு ஆகியவற்றில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஆண்டு இறுதிக்குள் ஏறக்குறைய 12,000 மாணவர்கள் நேரடி இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
கலைப் படைப்பு அடிப்படையிலான கற்றல் நடவடிக்கை, நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சுக்கான வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது அறிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு தொடங்கிய 2027ஆம் ஆண்டுக்குள் இங்குள்ள எல்லா உயர்நிலைப் பள்ளிகளிலும் அந்நடவடிக்கை அமல்படுத்தப்பட உள்ளது.
தொடக்கமாக, அந்த முன்னோடி நடவடிக்கை கடந்த ஆண்டு 22 உயர்நிலைப் பள்ளிகளில் அறிமுகம் கண்டது.
இசை நிகழ்ச்சிகளைக் கவனிப்பது, அவற்றைப் படைப்பது போன்றவற்றின் மூலம் இசை மீதான அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு இசைக் கல்வி பாடங்கள் மாற்றி அமைக்கப்பட்டதாக கல்வி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

