கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு, புக்கிட் தீமாவில் புதிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் கட்டப்பட இருக்கின்றன.
அவை டர்ஃப் சிட்டியில் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டர்ஃப் சிட்டியில் முன்பு குதிரைப் பந்தயங்கள் நடைபெற்ற இடத்தில் அடுத்த இருபதிலிருந்து முப்பது ஆண்டுகளில் 15,000லிருந்து 20,000 வீடுகளைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றில் இந்த வீவக வீடுகளும் அடங்கும்.
தி யூஆர்ஏ நிலையத்தில் புக்கிட் தீமா டர்ஃப் சிட்டி திட்டம் தொடர்பான கண்காட்சியை மே 23ஆம் தேதியன்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ திறந்துவைத்தார்.
நிகழ்வில் கலந்துகொண்டு பேசியபோது, அவர் டர்ஃப் சிட்டியில் தனியார் மற்றும் வீவக வீடுகளைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
நகர மையத்தில் பணிபுரியும் பல சிங்கப்பூரர்கள் தங்கள் வேலையிடத்துக்கு அருகில் வசிக்க விரும்புவதாக அவர் கூறினார்.
புக்கிட் தீமாவில் கட்டப்படும் வீவக வீடுகள் இதைப் பூர்த்தி செய்யும் என்றார் அவர்.
புதிய குடியிருப்புப் பகுதி, கார்கள் அதிகம் இல்லாத பகுதியாக இருக்கும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
பாதசாரிகளுக்கு ஏற்புடைய இடமாக, மிகச் சிறந்த பொதுப் போக்குவரத்து கட்டமைப்பு உள்ள இடமாக, நடந்து செல்வதற்கும் மிதிவண்டி ஓட்டுவதற்கும் தேவையான இணைப்புகள் உள்ள இடமாகப் புதிய குடியிருப்பு வட்டாரம் திகழும் என்று ஆணையம் கூறியது.
குடியிருப்பாளர்கள் வெறும் பத்து நிமிடங்கள் நடந்து டௌன்டவுன் ரயில் பாதையில் உள்ள சிக்ஸ்த் அவென்யூ நிலையம் அல்லது குறுக்குத் தீவு ரயில் பாதையில் உள்ள டர்ஃப் சிட்டி நிலையத்தை அடைந்துவிடலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
டர்ஃப் சிட்டி எம்ஆர்டி நிலையம் 2032ஆம் ஆண்டில் தயாராகிவிடும் என்று அமைச்சர் லீ கூறினார்.
முன்னாள் புக்கிட் தீமா டர்ஃப் சிட்டியில் உள்ள 27 கட்டடங்களைத் தக்கவைத்துக்கொள்ளவும் அதன் பயனீட்டை மாற்றியமைக்கவும் நகர மறுசீரமைப்பு ஆணையம் பரீசிலித்து வருகிறது.
முன்னாள் குதிரைப் பந்தய திடலாக விளக்கிய அதற்கு அருகில் உள்ள இரு காட்டுப் பகுதிகளான புக்கிட் திங்கியும் எங் நியூ அவென்யூவும் தக்கவைத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் குதிரைப் பந்தய வளாகத்தின் வடக்குள தெற்கு பிரதான பார்வையாளர் கூடங்கள், குதிரைப் பந்தய தடங்கள், புக்கிட் தீமா குதிரை சவாரி பயிற்சி நிலையம், குதிரைப் பராமரிப்புக் கூடங்கள் ஆகியவை மரபுடைமை சிறப்பு வாய்ந்த இடங்களாக மரபுடமைத் தாக்க மதிப்பீட்டுக் குழுவால் அடையாளம் காணப்பட்டுள்ளன.

