ஒரு பக்கம் மின்சார, எரிவாயு, சில்லறை, மற்ற பொருள்கள் தொடர்பான பணவீக்கம் அதிகரித்தாலும் சிங்கப்பூரின் ஏப்ரல் மாத மூலாதாரப் பணவீக்கத்தில் மாற்றம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
இதற்குக் காரணம், சேவை, உணவுப் பொருள்களின் விலை மிதமான அளவில் உயர்ந்ததே என்றும் கூறப்படுகிறது.
மூலாதாரப் பணவீக்கம் சிங்கப்பூர் குடும்பங்களின் செலவை மேலும் சிறப்பாக பிரதிபலிக்கிறது. இதற்காக அதில் தங்குமிடச் செலவு, தனியார் போக்குவரத்து செலவு ஆகியவை கணக்கில் கொள்ளப்படுவதில்லை.
இந்த மூலாதாரப் பணவீக்கம் ஆண்டு அடிப்படையில் ஏப்ரல் மாதம் 3.1 விழுக்காடாக இருந்தது என்றும் இது மார்ச் மாத பணவீக்கத்தை ஒத்திருந்ததாகவும் வர்த்தக, தொழில் அமைச்சும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் வியாழக்கிழமை (மே 23) கூட்டாக வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.
மேலும், ஒட்டுமொத்த பணவீக்கம் ஆண்டு அடிப்படையில் ஏப்ரல் மாதம் 2.7 விழுக்காடாக அதே நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் மார்ச் மாதம் ஒட்டுமொத்த பணவீக்கம் பிப்ரவரி மாத 3.4 விழுக்காடாக இருந்த நிலையில் அது மார்ச் மாதம் 2.7 விழுக்காடாக வீழ்ந்தது. இந்த 2.7 விழுக்காடே ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது 2021ஆம் ஆண்டு செப்டம்பருக்குப் பின் ஆகக் குறைந்த பணவீக்க நிலை என்று கூறப்படுகிறது.
ஏப்ரல் மாத மூலாதாரப் பணவீக்கத்தில் மாற்றமில்லை என்றபோதிலும் தனியார் போக்குவரத்துச் செலவு ஏற்றம் கண்ட நிலையிலும், தங்குமிடச் செலவு குறைந்ததால், பணவீக்கம் நிலைப்பட்டதாக கூறப்படுகிறது.
மாத அடிப்படையில் ஒட்டுமொத்த பணவீக்கம் 0.1 விழுக்காடு அதிகரித்தது, மூலாதாரப் பணவீக்கம் 0.4 விழுக்காடு ஏற்றம் கண்டது.
தொடர்புடைய செய்திகள்
சில்லறை, மற்ற பொருள்களின் விலையேற்றம் ஆண்டு அடிப்படையில் 1.6 விழுக்காடு ஏறியது. இந்த விலையேற்றம் மார்ச் மாதம் 0.7 விழுக்காடாக இருந்தது. ஏப்ரல் மாத பணவீக்க அதிகரிப்புக்குக் காரணம், குடிநீர் விலையேற்றம், அதைவிட அதிகமான விலையேற்றம் கண்ட தனிநபர் பயன்பாட்டுப் பொருள்கள் ஆகியவற்றுடன் சிறிதளவே குறைந்த ஆடை, காலணி விலைகள்.

