விமானப் பயணத்தின்போது காற்றுக் கொந்தளிப்பால் விமானம் இலேசாகக் குலுங்குவதைப் பலரும் அனுபவித்திருப்போம்.
வானில் காற்றுக் கொந்தளிப்பு ஏற்படுவது வழக்கமான செயல்தான்.
இந்நிலையில், காற்றுக் கொந்தளிப்பு எதனால் ஏற்படுகிறது, அதிலிருந்து பயணிகள் எவ்வாறு தங்களைத் தற்காத்துக் கொள்ளலாம் என்பன குறித்து மூத்த பயிற்றுவிப்பாளர் விமானியான திரு க. செங்குட்டுவன் சில விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.
வானில் ஏற்படும் காற்றுக் கொந்தளிப்பு இயற்கை நிகழ்வாக இருந்தாலும், காற்றுக் கொந்தளிப்பு எங்கு ஏற்படுகிறது என்பது மிக முக்கியமான ஒன்று என்று அவர் தெரிவித்தார்.
30,000 அடிக்கு மேல் மேகத்தில் பறக்கும்போது கண்களுக்குத் தெரியாத காற்று, விமானத்திற்கு நேராக அல்லது உருக்கோணலாக இருக்கும். காற்றுக் கொந்தளிப்பு பொதுவாக விமானம் மலைப்பகுதியில் அல்லது ஒரு நகரத்திற்கு மேலே பறக்கும்போது அதிகம் ஏற்படும்.
விமானியின் கண்களுக்குத் தெரியாத காற்று, திசைமாறுவதை தூய காற்றுக் கொந்தளிப்பு என்பார்கள். அவ்வேளைகளில் விமானத்தில் இருக்கும் கருவிகளால் அந்த அறிகுறிகளை கண்டுபிடிக்க இயலாது.
சாதாரணமாக மேகங்களில் ஏற்படும் காற்றுக் கொந்தளிப்பை கருவிகளால் அடையாளம் காண முடியும் என்பதால், விமானி அந்தப் பாதையைத் தவிர்க்கப் பார்ப்பார்.
காற்றுக் கொந்தளிப்பில் மூன்று வகைகள் உள்ளன. காற்றுக் கொந்தளிப்பு ஏற்படும்போதோ, அல்லது அதன் அறிகுறிகள் தென்பட்டாலோ விமானத்தில் இருக்கும் அனைவரும் கட்டாயம் இருக்கைவாரை அணிந்துகொள்ள வேண்டும். பயணிகள் எப்பொழுதும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்திருக்கவும் வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
காற்றுக் கொந்தளிப்பு ஏற்படும்போது விமானம் முதலில் மெதுவாகத்தான் குலுங்கும். அதனால், பயணிகள் பலரும் இருக்கைவார் அணிவதை அலட்சியமாக எடுத்துக்கொள்வதுண்டு. ஆனால், விமானம் திடீரென உயரம் குறைந்து, தாழப் பறக்கும்போது, அது வேகமாகக் கீழே இறங்குவது போன்ற உணர்வை அளிக்கும்.
பொதுவாக வங்காள விரிகுடா, தென்சீனக் கடல் மற்றும் மத்திய கிழக்கின் வடபகுதியில் காற்றுக் கொந்தளிப்பு அதிகம் ஏற்படும். அந்தப் பகுதிகளில் பருவமழைக் காலம் அடிக்கடி வரும். கடலுக்கு மேல் புயல் ஏற்பட்டால் அந்தப் பகுதிகளிலும் காற்றுக் கொந்தளிப்பு அடிக்கடி ஏற்படும்.
காற்று வெற்றிடம் எனப்படும் ‘ஏர் பாக்கெட்’ மிக அரிதாக ஏற்படும். மேகத்தில் காற்றழுத்தம் மாறிக்கொண்டே இருக்கிறது. மோசமான புயல் ஏற்பட்டால் காற்று வெற்றிடம் மேகத்தில் ஏற்படும். அதனால், விமானிகள் முடிந்த அளவிற்கு மேகத்தைக் கடந்து செல்வதைத் தவிர்ப்பார்கள்.
அண்மையில் காற்றுக் கொந்தளிப்பு காரணமாகச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று திடீரெனக் கிட்டத்தட்ட 6,000 அடிக்குக் கீழிறங்கியது. இச்சம்பவத்தில் அவ்விமானத்தில் பயணம் செய்த 73 வயது ஆடவர் ஒருவர் மாண்டுபோனார்; மேலும் பலர் காயமுற்றனர்.