மனைவியைக் குற்றவாளி என அடையாளப் படுத்துவதற்காக அவருடைய காரில் 200 கிராமுக்கும் அதிகமான கஞ்சாவை வைத்த குற்றத்திற்காக 37 வயது டான் சியாங்லாங்மீது வியாழக்கிழமையன்று குற்றஞ்சுமத்தப்பட்டது.
ஒருவருக்குத் தண்டனை வாங்கித்தரும் நோக்கத்துடன் போலியான ஆதாரங்களை உருவாக்கியதாகவும் கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள்களை வைத்திருந்ததாகவும் டான்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
2023ஆம் அக்டோபர் 17ஆம் தேதி அதிகாலை 5.40 மணியளவில் பொங்கோலில் உள்ள நார்த்ஷோர் டிரைவில் இருக்கும் கார் நிறுத்துமிடத்தில், ஒரு மாதின் காரில் டான், 216.17 கிராம் கஞ்சாவை வைத்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அந்தப் பெண் கஞ்சா வைத்திருந்தார் எனக் காவல்துறையினர் நம்ப வேண்டும் என்பதற்காக இச்செயலை டான் புரிந்ததாகவும் அவற்றில் குறிப்பிடப்பட்டன.
அந்தப் பெண் டானின் மனைவி எனக் கூறப்பட்டது.
11 பொட்டலங்களில் காய்கறிப் பொருள்களை டான் வைத்திருந்ததாகவும் அதில் கிட்டத்தட்ட 216.17 கிராம் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்காக, அவர்மீது போதைப்பொருள்களின் தவறான பயன்பாட்டுக்கான சட்டத்தின்கீழ் இரண்டாவது குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டது.
டானின் வழக்கு விசாரணை மே 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


