சிங்கப்பூர் ஏர்லைன்சின் ‘எஸ்கியூ321’ விமானம் மே 21ஆம் தேதி காற்றில் ஏற்பட்ட தீவிர மாற்றத்தால் நடுவானில் ஆட்டம் கண்டது. இதனால், விமானத்தில் பயணம் செய்த 73 வயது பிரிட்டிஷ் ஆடவர் மாண்டார். மேலும் பலர் காயமடைந்தனர்.
“இருக்கைவார் அணியக்கூறும் சமிக்ஞை வெளியான சில வினாடிகளுக்குள் இச்சம்பவம் நடந்தது”, என அந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் கூறினார்.
தான் கண்விழித்துப் பார்த்தபோது விமானத்தின் தரையில் கிடந்ததாக பிரிட்டிஷ் செய்தி நிறுவனமான ஸ்கை நியூஸுக்கு அளித்த பேட்டியில் பிரிட்டிஷ் நாட்டவரான 24 வயது ஜோஷ் சில்வர்ஸ்டோன் கூறினார்.
மக்களின் அழுகுரல்களைக் கேட்டதாகவும் விமானத்திற்குள் ஆங்காங்கே ரத்த கரைகளைக் கண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
விமானத்தின் மேற்கூரைகள் உடைந்து கீழே விழுவதையும் ஆங்காங்கே பொருள்கள் சிதறிக் கிடப்பதையும் தான் பார்த்ததாக மிகுந்த வலியுடன் ஆட்டங்கண்ட விமானத்தில் தான் கண்ட காட்சிகளை ஜோஷ் விவரித்தார்.
“எனக்கு முன்னால் பெண்மணி ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் மிகவும் வயதானவர். அவரால் நகர முடியவில்லை. அவருடைய பெயர் கூட அவருக்கு நினைவில்லை. அவர் ஏன் இந்த விமானத்தில் பயணம் மேற்கொண்டார் என்ற காரணத்தைக் கூட அவரால் விவரிக்க முடியவில்லை. இது மிகவும் கொடுமையானது,” என்றார் ஜோஷ்.
இச்சம்பவம் நடப்பதற்குச் சில வினாடிகளுக்குமுன் விமானச் சிப்பந்திகள் பயணிகளுக்கு உணவு வழங்கிக் கொண்டிருந்ததாகவும் விமான சிப்பந்தி ஒருவர் பயணிகளுக்குப் பரிமாற வைத்திருந்த வெந்நீர் விமானம் ஆட்டம் கண்டதும் அவர்மீது கொட்டியதால் அவருடைய உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்ததைத் தான் பார்த்ததாகவும் ஜோஷ் கூறினார்.
“விமானச் சிப்பந்திகளும் காயம் அடைந்தபோதிலும் பயணிகள் எல்லோரும் நலமாக இருக்கிறார்களா என்பதைச் சரிபார்த்துக்கொண்டே தங்கள் வலியையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தங்கள் சேவையை வழங்கினர்,” என அவர்களின் செயலை எண்ணி ஜோஷ் நெகிழ்ந்தார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், “தான் இருக்கைவாரை இறுக்கமாக அணிந்திருந்தேனா என்பது எனக்குச் சரியாகத் தெரியவில்லை. ஏனென்றால், விமானம் ஆட்டம் கண்டபிறகு தான் காயமடைந்து தரையில் கிடந்தேன்,” என்றார் ஜோஷ்.

