நாற்பதுகளின் பிற்பகுதியில் இருக்கும் நோயாளி திருவாட்டி மசிதா சூரிஃப் 20 ஆண்டுகளுக்கு மேலாக நார்த்திசுக் கட்டிகளால் பாதிக்கப்பட்டு வந்தார். அந்த நோய் நாளடைவில் மோசமடைய, அவருக்கு ரத்த சோகையும் பக்கவாதமும் ஏற்பட்டது.
சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் மகப்பேறியல், மகளிர் மருத்துவப் பிரிவில் மூத்த மருத்துவ ஆலோசகராக இருக்கும் டாக்டர் ரவிச்சந்திரன் நடராஜா, முதலில் திருவாட்டி மசிதாவுக்கு அளித்த சிகிச்சை கைகொடுக்கவில்லை.
இந்நிலையில், ஈராண்டுகளுக்குமுன் நவம்பர் மாதத்தில் அவருக்கு புதிய வகையான அறுவை சிகிச்சை மூலம் எளிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ‘வினோட்ஸ்’ எனப்படும் அந்த அதிநவீன மருத்துவ முறை மூலம் திருவாட்டி மசிதாவுக்கு குறைவான வலியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.
டாக்டர் ரவிச்சந்திரனும் அவரது குழுவில் இருக்கும் இதர மருத்துவர்களும் கைகோத்து 2021ல் இந்த சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தினர். பெண்ணோயியல் சார்ந்த பலதரப்பட்ட நோய்களுக்கு ‘வினோட்ஸ்’ சிகிச்சை முறை பயன்படுத்தப்படுகிறது.
கருப்பை, சிறுநீர்ப்பை, கருமுட்டைக் குழாய் ஆகிய உறுப்புகளை இந்த சிகிச்சை முறை மூலம் அகற்றலாம். புற்றுநோய்க் கட்டிகள், நார்த்திசுக் கட்டிகள் அவற்றில் அடங்கும்.
‘வினோட்ஸ்’ சிகிச்சை முறையில் நோயாளியின் கருப்பைவாய்ப் பகுதி முதலில் வெட்டப்படும். அதைத் தொடர்ந்து, இரண்டு வளையம் போன்ற சாதனங்களை வைத்து மருத்துவர்கள் ‘லேப்ராஸ்கோப்’ மூலம் சிகிச்சையை மேற்கொள்ள இடம் வகுக்கப்படும்.
வழக்கமான லேப்ராஸ்கோப் மற்றும் ரோபோ உதவியுடன் மேற்கொள்ளப்படும் சிகிச்சையை ஒப்பிடுகையில், ‘வினோட்ஸ்’ சிகிச்சையின்போது நோயாளிகளுக்கு வலி குறைவாகவே இருக்கும்.
குறுகிய காலம் மட்டுமே மருத்துவமனையில் தங்குவது, விரைவாக குணமடைவது, இயல்புநிலைக்கு விரைவாகத் திரும்புவது போன்ற நன்மைகளை நோயாளிகள் பெறலாம். முக்கியமாக அறுவை சிகிச்சைத் தழும்புகளும் கண்களுக்குத் தெரியாத வண்ணம் இருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
உடல்பருமன், இதர நோய் உள்ள நோயாளிகளுக்கும் ‘வினோட்ஸ்’ சிகிச்சை முறையை மேற்கொள்ள முடியும். இதுவரை மொத்தம் 225 ‘வினோட்ஸ்’ சிகிச்சைகள் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் இருக்கும் இதர மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை முறை மேற்கொள்ளப்படுகிறதா என்ற கேள்விக்கு பதில் இல்லையென்றாலும், சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் காலப்போக்கில் இந்த சிகிச்சை முறையை வைத்து இதர நோய்களுக்கும் தீர்வுகாண தமது குழு முயல்வதாக டாக்டர் ரவிச்சந்திரன் கூறினார்.
மேலும், நாளடைவில் மனித உடலில் இருக்கும் வெவ்வேறு உறுப்புகளுக்கும் இந்த சிகிச்சை முறை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் அவர் உள்ளார்.
பெண்ணோயியல் தொடர்பான நோய் பாதிப்புள்ளோருக்கு முடிந்த அளவில் வினோட்ஸ் சிகிச்சை முறை முதலில் பரிந்துரைக்கப்படும் என்றாலும், நோயின் தீவிரத்தை நன்கு ஆராய்ந்த பிறகுதான் எந்த சிகிச்சை முறையும் மேற்கொள்ளப்படும் என்றும் டாக்டர் ரவிச்சந்திரன் கூறினார்.

