முக்கிய ஏற்றுமதி 2024ல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது

முக்கிய ஏற்றுமதி 2024ல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது

2 mins read
f7133863-c7d3-41c3-8d70-afbd2eac9e82
ஆண்டு தொடக்கத்தில் ஏற்றுமதி எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் ஒட்டுமொத்த முன்னுரைப்பு குறைக்கப்பட்டுள்ளதாக என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு மே 23ல் தெரிவித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதி 2024ஆம் ஆண்டில் 4 விழுக்காட்டிலிருந்து 6 விழுக்காடு வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டு தொடக்கத்தில் ஏற்றுமதி எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் ஒட்டுமொத்த முன்னுரைப்பு குறைக்கப்பட்டுள்ளதாக என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு மே 23ல் தெரிவித்தது.

எண்ணெய் சாராப் பொருள்களின் ஏற்றுமதி இவ்வாண்டின் முதல் காலாண்டில் 3.4 விழுக்காடு குறைந்து ஏறத்தாழ $42 பில்லியனாகப் பதிவானது.

மின்னணுவியல், துல்லியப் பொறியியல், இயந்திரவியல், ஒட்டுமொத்த விற்பனை ஆகியவை சிங்கப்பூர் பொருளியலின் முக்கிய தூண்களாக இருப்பதாக ஆர்எச்பி சிங்கப்பூரின் இடைக்காலக் குழுமத் தலைமைப் பொருளியல் நிபுணர் திரு பார்னபஸ் கான் தெரிவித்தார்.

இந்நிலையில், 2024ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மின்னணுவியல் பொருள்களுக்கான தேவை அதிகரித்திருப்பதால் நிலைமை மேம்படும் என்று கூறப்படுகிறது.

2024ஆம் ஆண்டில் உலகளாவியப் பொருளியல் நடவடிக்கை 3.2 விழுக்காடு அதிகரிக்கும் என்று அனைத்துலகப் பண நிதியம் முன்னுரைத்திருப்பதை என்டர்பிரைஸ் சிங்கப்பூர் சுட்டியது.

இவ்வாண்டில் சீனா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியான் உட்பட சிங்கப்பூரின் பெரும்பாலான முக்கிய வர்த்தகப் பங்காளிகள் வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சிங்கப்பூரின் மின்னணுவியல் சாராப் பொருள்களின் ஏற்றுமதி, ஆண்டு அடிப்படையில் சரிவைக் கண்டது.

தொடர்புடைய செய்திகள்

மின்னணுவியல் பொருள்களின் ஏற்றமதி சரிந்தபோதும், முதல் காலாண்டில் சரிவின் வேகம் குறைந்தது.

இதன் விளைவாக கடந்த ஏழு காலாண்டுகளில் இதுவே ஆகக் குறைவான சரிவு என்று தெரிவிக்கப்பட்டது.

2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது மின்னணுவியல் பொருள்களின் உள்ளூர் ஏற்றுமதி இவ்வாண்டின் முதல் காலாண்டில் 1.6 விழுக்காடு குறைந்தது.

2023ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் அது 9.9 விழுக்காடு இறக்கம் கண்டிருந்தது.

தொலைத்தொடர்புச் சாதனங்கள், கணினிப் பாகங்கள் ஆகியவற்றின் ஏற்றமதி பேரளவில் குறைந்தது.

சில்லுகளுக்கான ஏற்றுமதி $100 மில்லியன் அதிகரித்தது.

தொடர்ந்து ஆறு காலாண்டுகளாகச் சரிவைக் கண்ட பிறகு, ஆண்டு அடிப்படையில் அது வளர்ச்சி கண்டது.

குறிப்புச் சொற்கள்