இவ்வாண்டு நடைபெறவுள்ள 59வது தேசிய தினக் கொண்டாட்டங்களில் 20% கூடுதலான சிங்கப்பூரர்கள் பங்கேற்று மகிழ்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு வழிவகுப்பது, விரிவடையும் கொண்டாட்டங்கள்.
ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று ‘பாடாங்கில்’ மட்டுமன்றி, ‘என்டியுசி’யுடன் இணைந்து புரொமொன்டரி @ மரினா பேயிலும் கடலோரக் கொண்டாட்டங்கள் இடம்பெறும். பாடாங்கில் 27,000 பேர் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. புரொமொன்டரியில் 8,000 பேர் கூடலாம்.
2024 தேசிய தினக் கருப்பொருள் ‘ஒன்றாய், ஒன்றுபட்ட மக்களாய்’.
“இவ்வாண்டிற்கான தேசிய தினக் கொண்டாட்டங்கள், நம் நாட்டின் முன்னேற்றத்தைக் கொண்டாடவும் நாட்டின்மீதுள்ள அன்பை வெளிப்படுத்தவும் நம்மைச் சுற்றியுள்ளோர்மீது அக்கறை காட்டவும் வாய்ப்பளிக்கின்றன.” என்றார் அணிவகுப்பின் தமிழ்ச் செய்தித்தொடர்பாளர் மேஜர் சுப்ரமணியம் சிங்காரம்.
பரவசமூட்டும் புதிய அம்சங்கள்
முதன்முறையாக 360 டிகிரி வாணவேடிக்கைகள் பாடாங்கில் பார்வையாளர்களுக்கு பரவசமூட்டும் அனுபவங்களை வழங்கும். மரினா பே பகுதி, பாடாங், அடெல்ஃபி கட்டடம் ஆகியவற்றிலிருந்து வாணங்கள் வான் நோக்கிப் பாயும்.
அனைவருக்கும் ஒளிரும் கைப்பட்டைகள் வழங்கப்படும். நீட்டிக்கப்பட்ட ஒளித்திரைகள், சமச்சீரில்லாத மேடை வடிவமைப்பு போன்றவையும் கொண்டாட்டங்களுக்கு மெருகேற்றும்.
முழுமைத் தற்காப்பின் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, முதன்முறையாக துடிப்பான தற்காப்புக் காட்சி பாடாங்கிலும் மரினா பேயிலும் ஒருங்கிணைந்து நடைபெறும். எவ்வாறு தேசிய, சமூக அமைப்புகள் அவசர நிலைகளில் செயல்படுகின்றன என்பதை இது காட்டும்.
சமூகத்திற்குச் சேவையாற்றும் சாதாரண குடிமக்களும் இவ்வாண்டுக் கொண்டாட்டங்களில் மூன்று குறுங்காணொளிகள்மூலம் சித்திரிக்கப்படுவர். ‘மென்டல் ஆக்ட்’ நிறுவனர் தேவானந்தன், உடற்பயிற்சி மருத்துவர் ரெத்தினம் கணேசன் போன்றோர் இடம்பெறுவர்.
தொடர்புடைய செய்திகள்
முதன்முறையாக பாடாங்கில், ‘முன்னோக்கிய அணிவகுப்பில்’ பங்குபெறும் அணிவகுப்புப் படையினர், பார்வையாளர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு அணிவகுத்துச் சென்று பொதுமக்களை ஈர்ப்பர்.
குடியிருப்பு வட்டாரங்களில் கொண்டாட்டங்கள்
ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று, மக்கள் கழகத்துடன் இணைந்து சிங்கப்பூரின் ஐந்து குடியிருப்பு வட்டாரங்களிலும் கொண்டாட்டங்கள் நடைபெறும்.
வாணவேடிக்கைகள், மேடை நிகழ்ச்சிகள், ராணுவம், காவல்துறை மற்றும் குடிமைத் தற்காப்புப் படையினரின் கண்காட்சிகள், கேளிக்கைத் திருவிழா, குடும்ப நடவடிக்கைகள் எனப் பலவும் மக்களைப் பரவசப்படுத்தும்.
சமூக உணர்வை வலுப்படுத்தும் இயக்கங்கள்
தொண்டூழியத்தை ஊக்குவிக்க #GiveAsOneSG எனும் இயக்கமும் சிங்கப்பூரர்களை ஒன்றிணைந்து கொண்டாடத் தூண்ட #TogetherAsOneSG எனும் இயக்கமும் தொடங்கப்படும்.
#TogetherAsOneSG இயக்கத்தின்கீழ், #FlyOurFlag (ஜூலை 1ஆம் தேதி முதல் பொதுமக்கள் தேசியக் கொடிகளைப் பறக்கவிடுவது), #EatAsOne (அன்பானவர்களோடு சேர்ந்து உணவு உண்பது), #DanceoftheNation (தேசிய தினப் பாடலுக்கு ஆடுவது) போன்ற சிறு சமூக ஊடக இயக்கங்கள் இடம்பெறும். அவற்றில் வெற்றிபெறுவோருக்கு தேசிய தின அணிவகுப்புக்கோ முன்னோட்ட நிகழ்ச்சிக்கோ நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படும்.
கூடுதல் தகவல்களுக்கு www.facebook.com/NDPeeps இணையத்தளத்தை நாடலாம்.
தேசிய தின அணிவகுப்புப் பாடல்
‘என்றென்றும் ஒன்றாவோம்’ எனும் இவ்வாண்டின் தேசிய தினப் பாடலுக்கு பெஞ்சமின் கெங் இசையமைத்துப் பாடியுள்ளார். சிங்கப்பூர் நதியை மையப்பொருளாகக் கொண்டுள்ளது இப்பாடல். முழுப் பாடலை www.facebook.com/watch/?v=974326567333174 இணையத்தளத்தில் காணலாம்.

