சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானங்களில் இருக்கைவார் அணியக் கேட்டுக்கொள்ளும் சமிக்ஞை விளக்குகள் எரியும்போது, உணவு பரிமாறும் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் நிலை மாற்றத்தால் விமானம் ஆட்டங்காண நேரிட்டால் அதைக் கூடுதல் கவனத்துடன் சமாளிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஓர் அங்கம் அது.
அத்தகைய நேரங்களில் விமானச் சிப்பந்திகளும் இருக்கைகளில் அமர்ந்து, இருக்கை வார் அணிந்துகொள்ள வேண்டும் என்று எஸ்ஐஏ, மே 23ஆம் தேதி தெரிவித்தது.
இதற்கு முன்னர், விமானம் ஆட்டங்காணும் வேளைகளில் சூடான பானங்கள் மட்டுமே பரிமாறப்படமாட்டா. ஆனால் புதிய அணுகுமுறையின்கீழ், எந்தவித உணவும் பானமும் பரிமாறப்படாது.
மோசமான வானிலையின்போது எப்போதும் மேற்கொள்ளப்படும் அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் நடப்பில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
பயணப்பை வைக்குமிடங்களில் பொருள்கள் கீழே விழாமல் சிப்பந்திகள் அவற்றைப் பாதுகாப்பாக வைப்பது, பயணிகளை அவரவர் இடங்களுக்குச் சென்று இருக்கை வார் அணியும்படி அறிவுறுத்துவது, கழிவறையில் இருப்போர் உட்பட உதவி தேவைப்படும் பயணிகளைக் கண்காணிப்பது போன்றவை அவற்றில் அடங்கும்.
பயணிகள், சிப்பந்திகளின் பாதுகாப்புக்கு முக்கிய முன்னுரிமை தருவதால் எஸ்ஐஏ அதன் நடைமுறையைத் தொடர்ந்து மறுஆய்வு செய்யும் என்று நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.
லண்டனிலிருந்து சிங்கப்பூர் வந்த எஸ்கியூ321 விமானம், மே 21ஆம் தேதி, மியன்மாரின் ஐராவதி ஆற்றுப்படுகைமேல் பறந்துகொண்டிருந்தபோது கடுமையாக ஆட்டங்கண்டதால், பேங்காக்கில் அவசரமாகத் தரையிறங்கியது.
தொடர்புடைய செய்திகள்
இச்சம்பவத்தில் பிரிட்டனைச் சேர்ந்த 73 வயது ஜெஃப்ரி கிச்சன் மாண்டார். மேலும் பலர் காயமடைந்தனர்.
46 பயணிகளும் சிப்பந்திகள் இருவரும் இன்னும் பேங்காக் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக மே 23ஆம் தேதி, எஸ்ஐஏ ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.
20 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகக் கூறிய பேங்காக்கின் சமிதிவெஜ் ஸ்ரீநகரின் மருத்துவமனை, அவர்களில் யாரும் உயிருக்கு அபாயமான நிலையில் இல்லை என்று தெரிவித்தது.
அந்த மருத்துவமனையில் உள்ள எஸ்கியூ321 பயணிகளில் ஆக மூத்தவருக்கு வயது 83. ஆக இளையவருக்கு வயது இரண்டு.