இணையக் குற்றம், மோசடியைத் தடுக்க முழுநேர தேசிய சேவையாளர்கள்

இணையக் குற்றம், மோசடியைத் தடுக்க முழுநேர தேசிய சேவையாளர்கள்

2 mins read
683d72c0-9e28-47f0-a5e1-d848ff9ba01f
வாகனத் தடயவியலுக்கான தரவுகள் சேகரிக்கப்படுவது குறித்து காவல்துறை செயல்திட்டக் கருத்தரங்கில் செய்து காண்பிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இணையக் குற்றங்களையும் மோசடிகளையும் தடுக்க முழுநேர ‘என்எஸ்எஃப்’ எனப்படும் தேசிய சேவையாளர்களை சிங்கப்பூர் பயன்படுத்த உள்ளது.

அதற்காக புதிய பணிப்பிரிவு ஒன்றை அது இவ்வாண்டு அறிமுகம் செய்ய உள்ளது.

‘இணைய காவல்துறை என்எஸ்எஃப்’ என்பது அந்த பணிப்பிரிவின் பெயர்.

காவல்துறை செயல்திட்ட கருத்தரங்கில் வெள்ளிக்கிழமை (மே 24) பங்கேற்றுப் பேசிய துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் புதிய பிரிவு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அப்பர் சாங்கி ரோட்டில் உள்ள சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தில் அந்தக் கருத்தரங்கு நடைபெற்றது.

முழுநேர தேசிய சேவையாளர்களிடம் உள்ள நிபுணத்துவத்தை சிங்கப்பூர் காவல்துறை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள பணிப்பிரிவு உதவும் என்று அவர் தெரிவித்தார்.

இணையக் குற்ற ஆணைய அலுவலகத்திலோ மோசடிக்கு எதிரான பிரிவிலோ முழுநேர தேசிய சேவையாளர்கள் பணியமர்த்தப்படலாம்.

“புதிய பணிப்பிரிவு முழுநேர தேசிய சேவையாளர்களுக்கு ஓர் அர்த்தமுள்ள அனுபவமாக இருக்கும். அத்துடன் இணையக் குற்றத்திற்கு எதிரான நிபுணத்துவத்தை ஆழமாகக் கற்று செயல்பட அது அவர்களை ஊக்குவிக்கும்.

“நமது மின்னிலக்கப் பொருளியல் செயல்படத் தொடங்கிய பின்னர் அதில் உள்ள புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்த அவர்களால் முடியும்,” என்றார் திரு ஹெங்.

தொடர்புடைய செய்திகள்

காவல்துறை அதிகாரியாக 15 ஆண்டு காலம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் திரு ஹெங்.

புதிய வேலை குறித்த கூடுதல் விவரங்களும் எப்போது அது தொடங்கும் என்பது குறித்த அறிவிப்பும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு தற்காப்பு அமைச்சும் முழுநேர தேசிய சேவையாளர்களை இணையக் குற்றத்திற்கு எதிராகப் பயன்படுத்தும் திட்டம் ஒன்றைத் தொடங்கியது.

இணையப் பாதுகாப்புத் திறன்வாய்ந்த தேசிய சேவையாளர்கள் உயரடுக்கு இணையக் குற்றத் தற்காப்பாளர்களாகச் செயல்பட அந்தக் குறுகியகாலத் திட்டம் அனுமதிக்கிறது.

குறிப்புச் சொற்கள்