சண்முகம், விவியன் இருவருக்கும் லீ சியன் யாங் தலா $200,000 இழப்பீடு வழங்க உத்தரவு

ரிடவுட் பங்களா விவகாரம்

சண்முகம், விவியன் இருவருக்கும் லீ சியன் யாங் தலா $200,000 இழப்பீடு வழங்க உத்தரவு

2 mins read
cd58df10-3b37-45e2-980f-bdc7a3d037b7
இழப்பீடு கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்ட லீ சியன் யாங் (படத்தில் இடம்) அமைச்சர்கள் வாய்ப்பு வழங்கியும் மன்னிப்பும் கேட்கவில்லை அவதூறானப் பதிவை நீக்கவும் இல்லை என நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்

ரிடவுட் சாலையில் உள்ள அரசு பங்களாவை வாடகைக்கு எடுத்த விவகாரத்தில் லீ சியன் யாங் ஃபேஸ்புக் பதிவு தொடர்பாக அமைச்சர்கள் கா சண்முகம், டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் இருவரும் திரு லீ மீது அவதூறு வழக்குத் தொடுத்திருந்தனர்.

இந்த வழக்கில் திரு லீ சியன் யாங் அமைச்சர்கள் இருவருக்கும் தலா $200,000 இழப்பீடு வழங்க வேண்டுமென்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர்கள் சண்முகம், விவியன் பாலகிருஷ்ணன் இருவரும் தனித்தனியாக திரு லீ சியன் யாங் மீது 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்தனர்.

திரு லீ சியன் யாங் முன்னாள் பிரதமர் திரு லீ குவான் யூவின் மகனும் தற்போதைய மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கின் இளைய சகோதரரும் ஆவார்.

ரிடவுட் சாலை அரசு பங்களாவை அமைச்சர்கள் இருவரும் வாடகைக்கு எடுத்த விவகாரத்தில் திரு லீ சியன் யாங் கடந்த ஆண்டு ஜூலை 23ஆம் தேதியன்று ஃபேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அமைச்சர்கள் இருவரும் சிங்கப்பூர் நில ஆணையம் அவர்களுக்கு சலுகை காட்டியதால் அவர்கள் இருவரும் ஊழல் புரிந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி கோ யிஹான் வெள்ளிக்கிழமை (மே 24) அன்று எழுத்துபூர்வ தீர்ப்பு வழங்கினார்.

திரு லீ சியன் யாங் தனக்கு எதிரான இரண்டு அவதூறு வழக்குகளிலும் வேண்டுமென்றே பதில் மனு தாக்கல் செய்து வாதிடவில்லை என்பதை நீதிபதி சுட்டினார். அதனால், இழப்பீட்டு தொகையை மதிப்பிடும் கட்டத்தில் வழக்குகளின் தீர்ப்புக்கு எதிராக வாதிடும் உரிமை திரு லீக்கு இல்லை என்பதை நீதிபதி விளக்கினார்.

இதைத் தொடர்ந்து, இழப்பீடு தொடர்பாக அமைச்சர்கள் முன்வைக்கும் சாட்சியத்தின் அடிப்படையிலும் அவர்கள் வழக்கறிஞரின் வாதத்தை வைத்து மட்டுமே இழப்பீட்டுத் தொகை நிர்ணயிக்கப்படும் என்று நீதிபதி கோ தெரிவித்தார்.

அதில் அமைச்சர்கள் இருவர் மீதான அவதூறு அவர்களின் நேர்மை, தொழில் ரீதியான நற்பெயர், நன்மதிப்பு ஆகிய அவர்களின் மூல நற்பண்புகளுக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறினார்.

அமைச்சர்கள் சண்முகம், டாக்டர் பாலகிருஷ்ணன் இருவரும் பொதுவாழ்வில் தலைவர்கள் என்றும் அவர்கள் உயர்நிலையான நேர்மையானவர்கள் என்றும் சமூகத்தில் அவர்களுக்கு உயர் நன்மதிப்பு இருப்பதாகவும் தீர்ப்பில் விளக்கினார். அத்துடன், திரு லீ சியன் யாங்கும் சமூகத்தில் நன்கு அறியப்பட்டவர் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

அந்த அவதூறு ஃபேஸ்புக் பதிவு சிங்கப்பூரில் அதிக அளவு மீண்டும் மீண்டும் மறுபதிவு செய்யப்படுவதாக நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், வாய்ப்பு வழங்கப்பட்டும் திரு லீ மன்னிப்புக் கேட்கவோ அந்தப் பதிவை நீக்கவோ செய்யவில்லை என்று நீதிபதி கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்