சிறாரிடம் பாலியல் குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களுக்காக நன்னடத்தைக் கண்காணிப்பு, சீர்திருத்தப் பயிற்சி ஆகியவற்றுக்கு ஆட்படுத்தப்பட்ட பிறகும் மீண்டும் தொடர்ந்து தவறு செய்த ஆடவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மார்கஸ் லிம் ஜியா லோங் எனும் அந்த 24 வயது ஆடவர் அண்மையில் ஐந்து சிறுவர்களிடம் தகாத முறையில் நடந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.
மேலும், உரிமமின்றி வாகனம் ஓட்டியது, நண்பரான 19 வயது ஆடவரைத் தவறு செய்யத் தூண்டியது போன்ற பல்வேறு குற்றங்களில் அவர் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
2022 மே 14 முதல் 2023 மே 2ஆம் தேதி வரை, உரிமமின்றி ஏழு சம்பவங்களில் அவர் ஹாலந்து ரோடு, மரினா கோஸ்டல் விரைவுச்சாலை போன்ற இடங்களில் வாகனம் ஓட்டினார்.
பத்து வெள்ளி பணம் தந்து, 2022 ஜனவரி 29ஆம் தேதி, மரினா பே சேண்ட்ஸ் ஹோட்டலின் 40வது தளத்திலிருந்து பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை வீசும்படி 19 வயது ஆடவரைத் தூண்டினார்.
லிம்முக்கு மே 21ஆம் தேதி, 13 மாதங்கள் 10 வாரங்கள் சிறைத்தண்டனையும் $1,200 அபராதமும் விதிக்கப்பட்டன.
சிறையிலிருந்து விடுதலையாகும் தேதியிலிருந்து 30 மாதங்களுக்கு அவர் வாகன ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்கவோ, புதிதாகப் பெறவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக லிம், தன் மீது சுமத்தப்பட்ட 13 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அவற்றில் பல, சிறுவர், இளையர் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சுமத்தப்பட்டவை. தண்டனை விதிக்கும்போது மேலும் 17 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.

