உள்ளூரில் விளைவிக்கப்படும் காய்கறிகளும் இங்கு வளர்க்கப்படும் மீன்களும் தீவு முழுவதும் உள்ள சில ஃபேர்பிரைஸ் பேரங்காடிக் கிளைகளில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
உள்ளூர் பண்ணையாளர்களுக்கு உதவ இந்த ஆறு மாத சோதனை முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் காய்கறி, மீன்களை பயனீட்டாளர்களுக்குக் கிடைக்கச் செய்வது, தேவையைச் சரிக்கட்டும் விதத்தில் விநியோகத்தைச் சீரமைப்பது ஆகியன இந்நடவடிக்கையின் நோக்கங்கள்.
கிராப்சிட்டி, மெட்ரோ என்னும் இரு உள்ளூர் பண்ணைகளில் விளைவிக்கப்படும் ஒரு வகைக் கீரைகளும் முட்டைகோஸ்களும் 200 கிராம் $1.78 என்னும் விலையில் விற்கப்படுகின்றன.
மற்றொரு வகைக் கீரை (பாயம்) 200 கிராம் $2.15 என்று விற்கப்படுகிறது.
‘எஸ்ஜி ஃபார்மர்ஸ் மார்க்கெட்’ என்னும் வணிகப் பெயருடன் ஃபேர்பிரைஸ் கடைகளில் அவை விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.
உள்ளூரில் இயங்கும் இதர பண்ணைகள் இதைவிடக் கூடுதல் விலைக்கு தங்களது காய்கறிகளை விற்கின்றன.
உதாரணத்திற்கு, 300 கிராம் சாய் ஸின் ஹுவா கீரை $3.23 என்ற விலையிலும் 250 கிராம் முட்டைகோஸ் $2.52 என்ற விலையிலும் விற்கப்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
இந்த முன்னோடித் திட்டத்தின்கீழ், சிலேபிக்கெண்டை என்று அழைக்கப்படும் திலாப்பிய வகை மீனும் சலுகை விலையில் விற்கப்படுகிறது.
முழு மீன் ஒன்றின் விலை $4.90க்கும் தோல்நீக்கி, வெட்டப்பட்ட அதே மீனின் விலை $5.90க்கும் விற்கப்படுகின்றன. இது வழக்கமான விலையைக் காட்டிலும் $1 குறைவு.
‘த ஸ்ட்ரெய்ட்ஸ் ஃபிஷ்’ என்னும் வணிகப் பெயர் தாங்கி விற்கப்படும் இந்த வகை மீன்கள் மேற்கு ஜோகூர் நீரிணையில் அமைந்திருக்கும் பல்வேறு உள்ளூர் பண்ணைகளில் பதப்படுத்தப்படுகின்றன.
‘எஸ்ஜி ஃபார்மர்ஸ் மார்க்கெட்’, ‘த ஸ்ட்ரெய்ட்ஸ் ஃபிஷ்’ ஆகிய இரு வணிகப் பெயர்களும் சிங்கப்பூர் வேளாண்-உணவு நிறுவனங்களின் கூட்டமைப்பு மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டவை.
உள்ளூர் வேளாண்-உணவுத் தொழில்களுக்கு உதவ, சிங்கப்பூர் கடலுணவுத் தொழிற்கூடச் சங்கம், காய்கறி, பழ விநியோகிப்பாளரான ‘அட் ஃபிரஷ்’ ஆகியவற்றுடன் இந்தக் கூட்டமைப்பு கைகோத்துள்ளது.
காய்கறிகள் மற்றும் மீன்களுக்கான தேவையையும் விநியோகத்தையும் ஒருங்கிணைக்க இந்தக் கூட்டு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.