மாத்தார் பெருவிரைவு ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருந்த ரயில் இயந்திரத்தில் திடீரென வெள்ளிக்கிழமை ( மே 24) அதிகாலை 1 மணியளவில் தீப்பற்றியது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் விரைந்துவந்து தீயை அணைத்தனர்.
தீப்பிடித்த ரயில் இயந்திரத்தின் வெப்பம் குறையும் வரை அதை நகர்த்த முடியாது என்பதால் தடங்களைமூட வேண்டியிருந்ததாக ‘எஸ்பிஎஸ் டிரான்சிட்’ நிறுவனம் கூறியது.
புகையைச் சுவாசித்ததற்காக ஊழியர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தால் ஆறு டெளண்டவுன் பெருவிரைவு ரயில் நிலையங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டது.
ஃபோர்ட் கேனிங் ரயில் நிலையத்திற்கும் மாத்தார் ரயில் நிலையத்திற்கும் இடையிலான தடங்களில் செல்லும் ரயில் சேவை வெள்ளிக்கிழமை காலை 7.26 மணி வரை மூடப்பட்டதாக ‘எஸ்பிஎஸ் டிரான்சிட்’ தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
ரயில் தடத்தைச் சரிசெய்யும் பணி நிறைவடைந்த பிறகு ரயில் சேவை மீண்டும் தொடங்கியது என அந்நிறுவினம் மேலும் கூறியது.
தாமதத்தால் பாதிக்கப்பட்ட பயணிகள், பயணம் மேற்கொள்வதற்காக சைனாடவுன் ரயில் நிலையத்திற்கும் பிடோக் நார்த் ரயில் நிலையத்திற்கும் இடையே இணைப்புப் பேருந்துச் சேவையை ‘எஸ்பிஎஸ் டிரான்சிட்’ நிறுவனம் ஏற்பாடு செய்தது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், அவ்வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளில் பயணிகள் இலவசமாகப் பயணம் மேற்கொள்வதற்கும் அந்நிறுவனம் ஏற்பாடு செய்தது.
தீ மூண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

