அதிகாரிகளுக்கு பொய்த் தகவல்கள் தந்தது, பொய்ப் பதிவுகளைச் செய்தது ஆகியவற்றுக்காக மூன்று காப்புறுதி முகவர்களுக்கு நாணய ஆணையம் நிதி ஆலோசகர்களாக பணிபுரியத் தடை விதித்துள்ளது.
திருவாட்டி யூனிஸ் யுவென் புவி லிங், திருவாட்டி கிரேஸ் டான் ஸென் ஸி, திரு பென்னி லிம் ஹீ லூன் ஆகிய மூன்று முகவர்களுக்கு முறையே ஐந்து ஆண்டுகள், மூன்று ஆண்டுகள், ஓராண்டு என நாணய ஆணையம் தடை விதித்துள்ளது.
வெள்ளிக்கிழமை (மே 24) முதல் அமலுக்கு வரும் இந்தத் தடை காரணமாக அம்மூவரும் எவ்விதமான நிதி ஆலோசனை சேவையும் வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இம்மூவரும் எந்த நிதி ஆலோசனை நிறுவனத்தையும் நிர்வகிக்க முடியாது என்பதுடன் எந்த நிதி ஆலோசனை நிறுவனத்திலும் கணிசமான பங்குகளை வைத்திருக்கக்கூடாது.
மேலும், திருவாட்டி யுவென்னும் திருவாட்டி டானும் எந்த காப்புறுதி நிறுவனத்தையும் நிர்வகிக்கக்கூடாது அல்லது எந்தக் காப்புறுதி திட்ட துணை நிறுவன நிர்வாகத்திலும் பங்குபெறக்கூடாது என்று ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட தனது அறிக்கையில் கூறியது.

