எஸ்கியூ321: தகவல் இல்லை எனக் கூறிய பயணியிடம் மன்னிப்புக் கேட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

எஸ்கியூ321: தகவல் இல்லை எனக் கூறிய பயணியிடம் மன்னிப்புக் கேட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

1 mins read
63c9b8c0-5904-4a65-a1c2-6cfaff333c96
எஸ்கியூ321 விமானத்தில் பயணம் செய்த ஆடவர் வருத்தம் தெரிவித்திருந்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

எஸ்கியூ321 பயணிகள் விமானம் ஆட்டங்கண்டதைத் தொடர்ந்து அதில் பயணம் செய்த ஆடவர் ஒருவர் சம்பவத்துக்குப் பிறகு தன்னிடம் போதுமான தகவல் அளிக்கப்படவில்லை எனக் கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கீத் டேவிஸ், அவரின் மனைவி ஆகியோரிடம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.

தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் தன்னைத் தொடர்புகொள்ளவில்லை என்று அவர் வியாழக்கிழமையன்று (மே 23) ஊடகங்களிடம் சொன்னதாக உள்ளூர் செய்திகள் தெரிவித்தன. காப்புறுதித் தொகையைப் பெறுவது, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் தனது மனைவியை மருத்துவக் காரணங்களுக்காக வெளியேற்றுவது போன்ற அம்சங்கள் குறித்துத் தனக்கு யாரும் தெரியப்படுத்தவில்லை என்று அவர் சொன்னார்.

திரு டேவிசின் மனைவிக்கு முதுகுத்தண்டில் மோசமான காயம் ஏற்பட்டதாகவும் அவர்கள் வசிக்கும் ஆஸ்திரேலியாவின் அடலெய்ட் நகருக்கு மனைவியை வெளியேற்ற அவர் எண்ணம் கொண்டுள்ளதாகவும் உள்ளுர் செய்திகள் தெரிவித்தன.

இதன் தொடர்பில் கேட்கப்பட்டபோது திரு டேவிசிடமும் அவரது மனைவியிடமும் தாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்தது. அவ்விருவருக்கும் தேவையான உதவியையும் ஆதரவையும் தான் வழங்கிவருவதாகவும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூறியது.

தற்போது தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள அவர்களைக் குடும்பத்தார் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருவதாகவும் நிறுவனம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்