6 வயது சிறுவனை பேனாவால் குத்தியதாக பெண்மீது குற்றச்சாட்டு

6 வயது சிறுவனை பேனாவால் குத்தியதாக பெண்மீது குற்றச்சாட்டு

1 mins read
2da6b8c0-fea9-49dc-a6f1-19c7cee306cf
படம்: - பிக்சாபே

குழந்தை பராமரிப்பு நிலையத்தில் ஆறு வயது சிறுவனைப் பலமுறை பேனாவால் குத்தியதாக 43 வயதுப் பெண்மீது வெள்ளிக்கிழமை (மே 24) குற்றஞ்சுமத்தப்பட்டது.

அப்பெண் குத்தியதால் அச்சிறுவனின் முகம், உச்சந்தலை ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டது.

சிறுவர்கள் மற்றும் இள வயதினர் சட்டத்தின்கீழ் தனது பராமரிப்பில் இருந்த குழந்தையை மோசமாக நடத்தியதாக அந்தப் பெண்ணின்மீது குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டது.

பாதிக்கப்பட்டவரின் அடையாளம், குற்றம் சாட்டப்பட்டவரின் அடையாளம், சம்பவம் நடந்த குழந்தை பராமரிப்பு நிலையம் குறித்த தகவல் ஆகியவற்றை நீதிமன்றம் வெளியிடவில்லை.

அந்தப் பெண் இந்திய நாட்டவர் என்றும் சிங்கப்பூர் நிரந்தரவாசி என்றும் குற்றப் பத்திரிகை தெரிவிக்கிறது.

இச்சம்பவம் 2022ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் குழந்தை பராமரிப்பு நிலையத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பெண் பாதிக்கப்பட்ட சிறுவனின் தலையில் பலமுறை பேனாவால் குத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இதனால், பாதிக்கப்பட்ட சிறுவனின் உச்சந்தலையில் 1 சென்டிமீட்டர் நீளமான சிராய்ப்பும் அவரது புருவத்தில் 2 சென்டிமீட்டர் நீளமுள்ள சிராய்ப்பும் தலைப்பாகத்தின் மேல் 1.5 சென்டிமீட்டர் சிராய்ப்பும் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்தப் பெண் தன்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொள்ளப்போவதாக கூறியுள்ளார்.

அவருக்கு 15,000 வெள்ளிக்குப் பிணை வழங்கப்பட்டது.

இந்த வழக்கு ஜூன் மாதம் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

குறிப்புச் சொற்கள்