சிங்கப்பூர் ஸ்போர்ட்ஸ் ஹப் அனுமதி அட்டையைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி இசை அரங்கிற்குள் நுழைந்த ஆடவருக்கு 10 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
கார்ல் பிலிப் ஜியோமோ டெங்குயி, 23, எனப்படும் அந்த கெமரூன் நாட்டு ஆடவர் புரூனோ மார்ஸ் இசை நிகழ்ச்சியைக் காண ஏப்ரல் 2ஆம் தேதி சிங்கப்பூர் வந்தார்.
இசை நிகழ்ச்சி தேசிய விளையாட்டரங்கில் ஏப்ரல் 3, 5 மற்றும் 6ஆம் தேதிகளில் நடைபெற்றது.
ஏப்ரல் 2ஆம் தேதி சிங்கப்பூர் ஸ்போர்ட்ஸ் ஹப் அரங்கிற்குச் சென்ற அவர், சில ஊழியர்கள் அனுமதி அட்டையைக் காட்டி அரங்கிற்குள் நுழைவதைக் கண்டார்.
அதனைக் காணொளி எடுத்த ஆடவர், மறுநாள், காணொளியில் பதிவான அட்டையைப் போல போலி அட்டையைத் தயாரித்தார்.
அதனைப் பயன்படுத்தி அரங்கில் பணியாற்றும் ஊழியர்போல இசை நிகழ்ச்சி அரங்கிற்குள் நுழைந்தார்.
நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டு இருந்தபோது விஐபி பிரிவுக்குச் சென்ற அவரை மடக்கிய பாதுகாவல் அதிகாரிக்குச் சந்தேகம் வந்தது. அந்த ஆடவர் அங்கிருந்து சென்ற பின்னர் அவர் தேடப்பட்டார்.
மறுநாளும் அதே போலி அட்டையைப் பயன்படுத்தியபோது அவர் பிடிபட்டார்.
தொடர்புடைய செய்திகள்
குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து சட்டவிரோதமாக அத்துமீறி நுழைதல், மோசடி போன்ற குற்றங்களுக்காக ஆடவருக்கு 10 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

