உள்துறை அமைச்சின் சீருடை சேவைகளுக்கான வேலை ஓய்வு பெறும் வயது 57க்கு உயர்த்தப்படும் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் அறிவித்திருக்கிறார்.
மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு, குடிமைத் தற்காப்புப் படை, காவல்துறை, சிறைத்துறை ஆகியவற்றில் பணியாற்றும் சீருடை அதிகாரிகள், 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியன்று அல்லது அதற்குப் பிறகு 56 வயதை எட்டினால் அவர்கள் கூடுதலாக ஓர் ஆண்டு சேவையாற்ற இயலும்.
ஆர்ச்சர்ட் ஹோட்டலில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற (மே 24) உள்துறை அமைச்சின் சீருடைச் சேவைகளுக்கான பதவி உயர்வு நிகழ்ச்சியில் திரு சண்முகம் உரையாற்றியபோது இதனை அறிவித்தார். ‘லெஃப்டினன்ட் கர்னல்’ அல்லது ‘சூப்ரின்டென்டண்ட்’ பதவிக்கு 332 அதிகாரிகள் உயர்வு பெறுவதை இந்த நிகழ்ச்சி அங்கீகரித்தது. அத்துடன், சீருடைச் சேவைகளில் 6,402 அதிகாரிகள் இவ்வாண்டு பதவி உயர்வு பெறுவர் என்று நிகழ்ச்சியின்போது அறிவிக்கப்பட்டது.
ஓய்வு வயது மாற்றத்தால் 14,000க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பயனடைவர். இதற்கு முன்னர் 2021லும் 2013லும் வேலையிலிருந்து ஓய்வுபெறும் வயது உயர்த்தப்பட்டதைச் சுட்டிய அமைச்சர் சண்முகம், 2030லும் அது 58 வயதுக்கு உயர்த்தப்படும் என்று குறிப்பிட்டார்.
ஒவ்வோர் ஆண்டுக்கும், சேவைகளில் சேர்வோரின் எண்ணிக்கையும் வெளியேறுவோரின் எண்ணிக்கையும் நிலையாக இருப்பதற்கான தேவை உள்ளதாகவும் திரு சண்முகம் கூறினார். தலைவர்களிடமும் நிபுணர்களிடமும் நீடித்தத் தொடர்ச்சியை உருவாக்குவதும் செயலாக்கத் தேவைகளை நிறைவேற்றவும் இந்த மனிதவள நிலைத்தன்மை தேவைப்படுவதாக அவர் கூறினார்.
“படிப்படியாக ஓய்வு வயதை உயர்த்தும் முடிவு, மனிதவளத்தைச் சீராக நிர்வகிக்க எங்களுக்கு உதவுகிறது. அத்துடன், பெரும்பாலான சிங்கப்பூரர்களைப் போல கூடுதல் ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழும் நம் அதிகாரிகளின் அனுபவங்களையும் நிபுணத்துவத்தையும் கூடுதலாகப் பயன்படுத்த ஓய்வு வயதின் ஏற்றம் வகைசெய்கிறது,” என்று அவர் கூறினார்.
உள்துறை அமைச்சின் சீருடைச் சேவைகளுக்குத் துடிப்பான பயிற்சியும் அனுபவமும் தேவைப்படுவதாக திரு சண்முகம் கூறினார். “நம் அதிகாரிகளில் பெரும்பாலானோர் தங்கள் வாழ்க்கைத்தொழிலின் தொடக்கத்திலேயே வேலையில் சேர்ந்து, பயிற்சிபெற்று, மேம்பட்டு, பதவி உயர்வு அடைந்து வேலையிலிருந்து ஓய்வு பெறும்வரை தொடர்ந்து சேவையில் நீடிக்கின்றனர்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், ஆண்டுக்குச் சராசரியாக 135 அதிகாரிகள் பணியிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் அவர்களில் 36 விழுக்காட்டினரை சீருடைச் சேவைத்துறை மறுவேலைக்கு எடுத்திருப்பதாகவும் அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
தேசிய வேலை ஓய்வுக்கான வயது தற்போது 63 என்றும் அது 2026ல் 64க்கு உயர்த்தப்படும் என்றும் திரு சண்முகம் சுட்டினார்.
உள்துறை அமைச்சின் சீருடைச் சேவைகளின்மீது சிங்கப்பூரர்கள் தொடர்ந்து அதிக அளவிலான நம்பிக்கை வைத்திருப்பதைக் காட்டும், 2023ன் பிற்பகுதி முதல் 2024ன் முற்பகுதி வரை நடத்தப்பட்ட பொதுமக்கள் கண்ணோட்டக் கருத்தாய்வு ஒன்றின் புள்ளிவிவரங்களையும் அமைச்சர் சண்முகம் சுட்டினார்.
“சீருடைச் சேவைகள்மீது நம்பிக்கை இருப்பதாக 92 விழுக்காட்டினர் கூறினர். அத்துடன், சிங்கப்பூரைப் பாதுகாப்புடன் வைத்திருக்க சீருடைச் சேவைகளால் இயலும் என்று 93 விழுக்காட்டினர் நம்பிக்கை தெரிவித்தனர்,” என்றும் அவர் சொன்னார்.
பதவி உயர்வு பெறுவோரில் ஒருவரான குடிநுழைவு சோதனைச் சாவடி அதிகாரி செந்தாமரை வைத்தியலிங்கம், 53, துணை உதவி ஆணையாளராகப் பொறுப்பேற்றது குறித்து மகிழ்வதாகத் தமிழ் முரசிடம் தெரிவித்தார். “ஓய்வு வயதின் ஏற்றத்தை வரவேற்கிறேன். இது அதிகாரிகள் பலருக்கும் கூடுதல் வாய்ப்புகளைக் கொடுக்கும்,” என்று அவர் கூறினார்.

