தேசிய தின அணிவகுப்பு 2024, அதன் முன்னோட்ட நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கான நுழைவுச்சீட்டுகளுக்கு மே 27ஆம் தேதி நண்பகலிலிருந்து பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.
அவர்கள் சிங்பாசைப் பயன்படுத்தி மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
முதன்முறையாக நடப்புக்கு வந்துள்ள இந்த நடைமுறை, மோசடிச் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும், ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெறும் தேசிய தின அணிவகுப்பு அல்லது ஜூலை 27, ஆகஸ்ட் 3ஆம் தேதிகளில் நடைபெறும் முன்னோட்ட நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இம்மூன்று நிகழ்ச்சிகளும் பாடாங் திடலில் நடைபெறும் என்று தேசிய தின அணிவகுப்பு 2024ன் ஏற்பாட்டுக் குழு, மே 24ஆம் தேதி தெரிவித்தது.
ஜூன் 10ஆம் தேதி நண்பகலுக்குள் இந்த நுழைவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
பாடாங் திடலில் கிட்டத்தட்ட 27,000 பார்வையாளர்கள் அணிவகுப்பு நிகழ்ச்சிகளைக் காணமுடியும்.
இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்பின் கருப்பொருள், ‘ஒன்றாய், ஒன்றுபட்ட மக்களாய்’ என்பதாகும். நாட்டின் வருங்காலத்தை வடிவமைப்பதில் சிங்கப்பூரர்களின் கூட்டு வலிமையை வலியுறுத்துவது இந்தக் கருப்பொருளின் நோக்கம்.
தொடர்புடைய செய்திகள்
பொதுமக்கள், www.ndp.gov.sg என்ற இணையத்தளத்தில் நுழைவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பதாரர்கள் இரண்டு, நான்கு அல்லது ஆறு நுழைவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஒரு விண்ணப்பம் ஒருமுறை மட்டுமே குலுக்கலில் சேர்த்துக்கொள்ளப்படும் என்று ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
சிங்பாஸ் இல்லாதவர்கள் அதற்கு விண்ணப்பிக்கும்படி ஆலோசனை கூறப்பட்டுள்ளது அல்லது நம்பிக்கைக்கு உரியவர்களின் சிங்பாஸ் கணக்கைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். இயலாதவர்கள் சர்வீஸ்எஸ்ஜி நிலையங்களுக்கு நேரில் செல்லலாம்.
தேசிய தின அணிவகுப்புக்கான நுழைவுச்சீட்டுகளுக்கு இந்த வழிகள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். சரிபார்க்கப்படாத இணைய இணைப்புகளில் தனிப்பட்ட விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டாம் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவை மோசடி முயற்சிகளாக இருக்கக்கூடும் என்பதை ஏற்பாட்டுக் குழு சுட்டியது.
வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்களுக்கு ஜூன் 21க்கும் ஜூன் 25ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் அதுகுறித்துத் தகவல் அனுப்பப்படும். அத்தகைய தகவல்கள் ndp2024@klook.com என்ற இணையத்தளத்திலிருந்து மட்டுமே அனுப்பப்படும்.
கைக்குழந்தைகள், குழந்தைகள் என அனைவருக்கும் நுழைவுச்சீட்டு பெறவேண்டியது அவசியம்.
இந்த நுழைவுச்சீட்டுகள் கண்டிப்பாக விற்பனைக்கு அல்ல. அவ்வாறு விற்க முயல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

