டான் சீ கியோங் என்பவர் எஸ்பிஎஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக உள்ளார்.
இவர் பேருந்து சேவை எண் 81 இயக்கும்போது அந்தப் பேருந்து நெக்ஸ் கடைத்தொகுதி வளாகத்தை எட்டும்போது அவர் சாலைகளில் உள்ள வாகன நெரிசலை கவனிப்பதுடன் காலாங்-பாய லேபார் விரைவுச்சாலையையும் கண்காணிக்க வேண்டியுள்ளது.
அவர் தமது கண்களுக்கு தென்படாத பகுதிகளில் பார்வையை திருப்ப தலையை இங்கும் அங்கும் திருப்பும்போது பேருந்து பக்கவாட்டிலும் பேருந்துக்குப் பின்னாலும் வாகனங்கள், மனிதர்கள் தென்படுகிறார்களா என்பதை பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடிகள் வழியாகவும் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.
இது போதாதென்று அந்த 39 வயது பேருந்து ஓட்டுநர் திடீரென பேருந்துப் பாதையில் வரக்கூடிய சைக்கிளோட்டிகள், மோட்டார்சைக்கிளோட்டிகள் ஆகியோரையும் கவனிக்க வேண்டும்.
இவர் போன்ற பேருந்து ஓட்டுநர்கள் இப்பொழுது மன அமைதியடையலாம். இவர் ஓட்டும் பேருந்து புதிய ‘ஏஜில் டிரைவ் சேவ்+’ என்ற திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள விபத்து எச்சரிக்கை முறையின்கீழ் வரும் 27 பேருந்து சேவைகளில் ஒன்று.
இந்த முறை ஆறுமாத அறிமுகத் திட்டமாக எஸ்பிஎஸ் நிறுவனமும் எஸ்டி என்ஜினியரிங் என்ற தொழில்நுட்ப, பொறியியல் நிறுவனமும் கூட்டாக செயல்படுத்தியுள்ளன. இந்தத் திட்டம் சோதனை அடிப்படையில் அக்டோபர் மாத மத்திவரை செயல்படுத்தப்படும்.
இந்த கண்காணிப்பு முறை பேருந்து சேவை எண் 29, 40, 81, 137 ஆகியவற்றில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. .
இந்த கண்காணிப்பு முறை 360 டிகிரி மேம்பட்ட விபத்து எச்சரிக்கை முறை என்று பெயரிடப்பட்டுள்ளது. இது வெள்ளிக்கிழமை (மே 24) அன்று பிடோக் நார்த் பேருந்து பணிமனையில் அறிமுகம் கண்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்த கண்காணிப்பு முறையின் முக்கிய அம்சமாக பேருந்தைச் சுற்றி அகண்ட பகுதியை நம் பார்வைக்குக் கொண்டு வரும் திறன் பெற்ற நான்கு பெற்ற கேமராக்கள் கொண்டிருக்கும். இவை ஓட்டுநரின் பார்வைக்குத் தென்படாத பகுதிகளில் உள்ள பாதசாரிகளையும் பேருந்துகளையும் ஓட்டுநருக்கு அடையாளம் காட்டும்.
இந்த முறையின்கீழ் அந்த கேமராக்கள் சாலை, நடைமேடை ஆகியவையும் வேறுபடுத்தி காட்டப்படும். இதனால், சாலையில் விபத்து அபாயத்தில் உள்ள பாதசாரியையும் அது காட்டும். அதேபோல், இது பேருந்துக்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பவரையும் அடையாளம் காட்டும்.
சாலையில் பேருந்து ஓட்டுநரின் கண்களுக்கு தென்படாத பகுதிகளில் வாகனங்களோ பாதசாரிகளோ இருந்தால் உணர்கருவிகள் பேருந்து ஓட்டுநரின் முன்னால் உள்ள திரையில் அவை எடுத்துக்காட்டும். அத்துடன், பாதசாரிகள் சைக்கிளோட்டிகள் சாலையில் இருந்தால் எச்சரிக்கை ஒலியும் எழுப்பப்படும்.
மேலும், பேருந்துக்கு 4.3மீட்டர் தூரத்துக்குள் ஒருவர் வந்தால் பேருந்தின் பக்கவாட்டில் உள்ள மின்மினி விளக்கும் எச்சரிக்கை ஒலியும் நம் கவனத்தை ஈர்க்கும்.
இந்த எச்சரிக்கை அம்சங்கள் பேருந்து நகரும்போது மட்டுமே எழுப்பப்படும்.

