தரவுக்கசிவு: மொழி வகுப்புகள் நடத்தும் நிறுவனத்திற்கு $74,000 அபராதம்

தரவுக்கசிவு: மொழி வகுப்புகள் நடத்தும் நிறுவனத்திற்கு $74,000 அபராதம்

1 mins read
38709ccd-c216-48ce-aef3-8d8196fdc863
‘லிங்கோஏஸ்’ நிர்வாகியின் கணக்கில் ஊடுருவி அந்தக் கணக்குக்கான சிறப்பு அணுகலைப் பயன்படுத்தி, 557,144 பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை அந்த இணைய ஊடுருவி அணுகினார். - கோப்புப்படம்: டிஎன்பி

உலகெங்கிலும் பல நாடுகளில் உள்ள பிள்ளைகளுக்கு இணையம் மூலம் சீனம், ஆங்கிலம் போன்ற மொழிப் பாடங்களை நடத்தும் நிறுவனம் ‘பிபி லிங்கோ’.

அதன் இணையப் பெயரான ‘லிங்கோஏஸ்’ அடிப்படையில் பயனர்களுக்கு அந்த நிறுவனம் கடவுச்சொல்லை உருவாக்கியது. இதன் விளைவாகத் தரவுக்கசிவால் அரை மில்லியனுக்கும் அதிகமான அதன் பயனர்கள் பாதிக்கப்பட்டனர்.

கசிந்த தனிநபர் தரவுகளில் கைப்பேசி எண்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், கையொப்பங்கள், சீன நாட்டினரின் அடையாள அட்டை எண்கள் ஆகியவை அடங்கும். இதற்காக, சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு இயங்கும் அந்த நிறுவனத்திற்கு $74,000 அபராதமாகத் தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் மே 23ஆம் தேதி விதித்தது.

2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இணைய ஊடுருவி ஒருவர், ‘லிங்கோஏஸ்’ நிர்வாகியின் கணக்குக்கான கடவுச்சொல்லை ‘ப்ரூட் ஃபோர்ஸ்’ எனும் இணையத் தாக்குதல் முறையைப் பயன்படுத்தி அறிந்தார்.

நிர்வாகியின் கணக்கில் உட்புகுந்து அந்தக் கணக்குக்கான சிறப்பு அணுகலைப் பயன்படுத்தி, 557,144 பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை அந்த இணைய ஊடுருவி அணுகினார்.

இதுகுறித்து அந்த இணைய ஊடுருவி அந்த நிறுவனத்திற்குத் தகவல் தெரிவித்தார்.

தனது மாணவர்கள், பெற்றோர்கள் ஊழியர்கள் ஆகியோரின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கத் தேவையானப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய நிறுவனம் தவறிவிட்டதாக ஆணையம் கண்டறிந்தது.

அதனையடுத்து அந்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்