பான் பசிபிக் ஹோட்டலில் உள்ள பிரபலமான ‘எட்ஜ்’ எனும் உணவகம் செயல்படுவதற்குச் சிங்கப்பூர் உணவு அமைப்பு தற்காலிகத் தடை விதித்துள்ளது.
அங்கு உணவு உட்கொண்ட பிறகு 16 பேர் நோய்வாய்ப்பட்டதைத் தொடர்ந்து, அந்த உணவகத்தின் உரிமம் மே 24 முதல் அறிவிக்கப்படும் வரையில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
மே 2ஆம் தேதிக்கும் மே 18ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த உணவகத்தில் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்டவர்கள் சம்பந்தப்பட்ட ஆறு இரைப்பை குடல் அழற்சி சம்பவங்கள் குறித்து விசாரித்து வருவதாகச் சிங்கப்பூர் சுகாதார அமைச்சும் சிங்கப்பூர் உணவு அமைப்பும் சனிக்கிழமையில் (மே 25) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
மேலும், பாதிக்கப்பட்ட அனைவரும் புறநோயாளி சிகிச்சை பிரிவையும் சுய மருந்துகளையும் நாடினர் என்றும் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

