குடும்பங்களுக்கு உகந்த நாடாக சிங்கப்பூரை உருவாக்க பல முயற்சிகள் தொடர்ந்து இடம்பெறும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் உறுதியளித்துள்ளார்.
இப்போது குடும்பங்களில் குழந்தை வளர்ப்பதில் தந்தையரும் கூடுதல் பங்கு வகிப்பதைச் சுட்டிய அவர், பணிச்சுமையைத் தாண்டி ஒரு குடும்பத்தை கட்டிக்காப்பது எளிதானதன்று எனச் சொன்னார். இதனால் வேலையிடங்களில் நீக்குப்போக்கான ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
கரையோரப் பூந்தோட்டங்களில் சனிக்கிழமை (மே 25) பிற்பகல் நடைபெற்ற தேசிய குடும்ப விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரதமர் வோங், விழாவை தொடங்கி வைத்தார். சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லியும் அவருடன் இணைந்திருந்தார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குடும்பங்களுடன் உரையாடிய திரு வோங், பிரதமராகப் பதவியேற்ற பிறகு கலந்துகொண்ட முதல் சில சமூக நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று.
நிதி அமைச்சருமான திரு வோங், நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளுக்கான முத்தரப்பு வழிகாட்டிகள் மூலம் வேலைக்குச் செல்லும் பெற்றோரால் தங்கள் குடும்பங்களுக்கு அதிக நேரம் ஒதுக்க முடியும் என்று சொன்னார்.
சிங்கப்பூரைக் குடும்பங்களுக்கு மேலும் உகந்த இடமாக அமைக்கும் முயற்சிக்குக் கூடுதல் பங்காளித்துவ அமைப்புகள் தேவைப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஃபேமிலிஸ் ஃபார் லைஃப் மன்றம் சிங்கப்பூர் குடும்பங்களுக்கு பல திட்டங்களை ஏற்பாடு செய்து வருகிறது என்றும் தமது உரையில் பிரதமர் வோங் கூறினார்.
வாரயிறுதிகளில் மட்டும் குடும்பங்கள் கலந்துகொள்ளும் வகையில் இருந்த தேசிய குடும்ப விழா, இம்முறை ஒரு மாதம் முழுவதும் நடைபெறுகிறது. வாழ்நாள் குடும்பங்கள் மன்றம் (ஃபேமிலிஸ் ஃபார் லைஃப்) ஈராண்டுகளுக்கு முன்பு இந்த விழாவைத் தொடங்கியது.
ஜூன் பள்ளி விடுமுறை தொடங்கிவிட்ட வேளையில், 140க்கும் மேற்பட்ட பங்காளித்துவ அமைப்புகளுடன் கைகோத்து ஜூன் 23ஆம் தேதி வரை பல நிகழ்ச்சிகளுக்கு மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இளம் தம்பதியினர், சிறு வயதுப் பிள்ளைகள் உடைய குடும்பங்கள், இளையர்கள், பல தலைமுறைகளைக் கொண்ட குடும்பங்கள், உடற்குறையுள்ளவர்கள் இருக்கும் குடும்பங்கள், வசதி குறைந்த குடும்பங்கள் எனப் பலதரப்பினருக்கும் மன்றம் பல திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது.
“வாழ்நாள் குடும்பங்கள் மன்றத்தில் தொண்டூழியத் தலைவராக இருப்பதால் என்னால் பலவற்றைக் கற்றுக்கொள்ள முடிகிறது. குடும்பங்களுக்கு சேவை செய்வதன் மூலம் குடும்ப நேரம், குடும்பங்கள் ஒன்றுகூடுவதற்கான வழிகளின் முக்கியத்துவத்தைக் குடும்பங்களிடம் கொண்டு சேர்க்கிறேன்.
“இளம் தம்பதியினருடன் உரையாடும்போது பிள்ளை வளர்ப்பதில் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களை அறிகிறேன்,” என்று தொண்டூழியர் தர்ஷன் கணேசமூர்த்தி, 21, சொன்னார்.
“சிங்கப்பூர் எவ்வளவு நவீனமயமானாலும் இங்கு குடும்பங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நமது கலாசாரப் பண்புகளை விட்டுவிடாமல் குடும்பத்துடன் கூடுதல் நேரம் செலவிடுவதற்கான வாய்ப்பை இந்நிகழ்ச்சி வழங்கியுள்ளது,” என்று நிகழ்ச்சியில் தமது குடும்பத்தினருடன் கலந்துகொண்ட பள்ளி நூலகர் கேத்தரின் நவீன், 33, கூறினார்.
மேல்விவரங்களுக்கு: http://www.go.gov.sg/familyfestSG