உயர்கல்வி மாணவர்களில் 40% வேலை செய்கின்றனர்: எஸ்டி ஆய்வு

உயர்கல்வி மாணவர்களில் 40% வேலை செய்கின்றனர்: எஸ்டி ஆய்வு

2 mins read
74da0719-cb6c-46a7-a74e-84f861b9c588
20 வயதாகும் இர்ஃபான் ஃபிக்ரி, பள்ளி விடுமுறை நாள்களிலும் வாரயிறுதி நாள்களிலும் உணவகம் ஒன்றில் வேலைபார்க்கிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

உயர்கல்வி பயிலும் தங்கள் பிள்ளைகள் சிறிய வேலைகளில் ஈடுபட்டுப் பொருளீட்டுவதாக 40 விழுக்காட்டுப் பெற்றோர் அண்மைக் கருத்தாய்வில் தெரிவித்துள்ளனர்.

கல்வி பயிலும், குறிப்பாக, தொழில்நுட்பக் கல்விக்கழகம் (ஐடிஇ), பலதுறைத் தொழிற்கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் பயிலும் பிள்ளைகளை உடைய 500 பெற்றோரிடம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இந்தக் கருத்தாய்வை நடத்தியது.

இவ்வாறு படிக்கும்போதே பொருள் ஈட்டும் மாணவர்களில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினர் வார நாள்களில் வேலைசெய்வதாகக் கூறினர். ஏறக்குறைய 60 விழுக்காட்டினர், பள்ளி விடுமுறை நாள்களில் வேலைசெய்வதாகக் கூறினர்.

கருத்தாய்வில் கலந்துகொண்டோர் ஒன்றுக்கு மேற்பட்ட தெரிவுகளைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்கப்பட்டது.

பள்ளி செல்லும் பிள்ளைகளுக்குப் பெற்றோர் செலவுக்காக எவ்வளவு பணம் தருகின்றனர் என்று தெரிந்துகொள்ளும் பொருட்டு இந்தக் கருத்தாய்வு நடத்தப்பட்டது.

பிள்ளைகளுக்குச் செலவிடுதல், சேமித்தல், வேலைசெய்தல் போன்ற அம்சங்கள் தொடர்பான விவகாரங்கள் குறித்துக் கருத்துத் திரட்டுவது இதன் நோக்கம்.

மாணவர்கள் இவ்வாறு படிக்கும்போதே வேலைபார்க்கும் போக்கிற்குக் கூறப்பட்ட மூன்று முக்கியக் காரணங்கள், ஊழியரணியில் சேர்வதற்கு முன்பே வேலை அனுபவம் பெறுதல், தாங்கள் விரும்பிய வாழ்க்கைத் தரத்திற்குக் கூடுதல் தொகை செலவிடுதல், நிதிச் சுதந்திரம் ஆகியவையாகும்.

அத்தியாவசியத் தேவை என்றில்லாமல், ஆனாலும் தாங்கள் விரும்பும் சிலவற்றுக்குப் பெற்றோரிடம் பணம் கேட்காமல் இவ்வாறு தாங்களாகவே வேலைபார்த்து, பொருள் ஈட்டி, செலவு செய்யலாம் என்று சில மாணவர்கள் கூறினர்.

சமூக ஊடகங்களின் தாக்கம் இளையர்களிடையே, நினைத்ததைப் பெறுவதில் வெற்றியடையக் கடினமாக உழைக்க வேண்டும் என்ற மனப்போக்கை உருவாக்கியுள்ளது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பயணம் உள்ளிட்ட சில அனுபவம் தரும் அம்சங்களில் நண்பர்களைப்போன்றே தாங்களும் ஈடுபட இளையர்கள் விரும்புவதையும் அவ்வாறு செய்ய இயலாவிட்டால் தாங்கள் தோற்றுப்போனதாகக் கருதுவதையும் வல்லுநர்கள் சுட்டினர்.

இளையர்கள் தங்கள் திறன்களைப் பொருள் ஈட்டும் வாய்ப்புகளாக மாற்றிக்கொள்ள சமூக ஊடகங்கள் உதவுவதை வல்லுநர்கள் குறிப்பிட்டனர்.

இவ்வாறு படிக்கும்போதே பொருளீட்டும் மாணவர்களில் சிலர், தங்கள் செலவுபோக, தாத்தா, அப்பா என்று அதிகம் சம்பாதிக்க இயலாத நிலையில் உள்ள நெருங்கிய உறவினர்களுக்கு உதவுவதும் தெரியவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்உயர் கல்விமாணவர்கள்வேலை