வாக்காளர் பதிவு: 6,500 வெளிநாட்டு சிங்கப்பூரர்களுக்கு தவறான மின்னஞ்சல்

2 mins read
5a62a376-d7c5-4c88-b8c6-ddf5e207065b
தேர்தல் துறை அலுவலகம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர்களில் ஏறக்குறைய 6,500 பேருக்குக் கடந்த வெள்ளிக்கிழமை (மே 24) பிழையான மின்னஞ்சல் ஒன்று தேர்தல் துறையால் அனுப்பப்பட்டு உள்ளது.

“வெளிநாட்டில் இருந்து வாக்களிக்க உங்களது பெயர் வெற்றிகரமாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது,” என்று அந்த மின்னஞ்சலில் உள்ளது.

வாக்காளராகப் பதிவு செய்ய வெளிநாட்டில் இருந்து அனுப்பப்பட்ட விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது என்று அந்த மின்னஞ்சலில் இருப்பதைக் கவனித்த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அது பற்றி தேர்தல் துறையிடம் வினவியது.

அதற்கு ஞாயிற்றுக்கிழமை (மே 26) பதிலளித்த தேர்தல் துறையின் பேச்சாளர், வெளிநாட்டு வாக்காளர் பதிவுக்கு ஏற்கெனவே விண்ணப்பம் அனுப்பி இருந்தோருக்கு அந்த மின்னஞ்சல் தவறுதலாக அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தொழில்நுட்பக் கோளாறு அதற்குக் காரணம் என்றும் கூறினார்.

“தரவுகள் ஊடுருவப்படவில்லை. அந்த மின்னஞ்சலை நீக்கிவிடுமாறு வெளிநாடுகளில் உள்ள எல்லா சிங்கப்பூரர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது,” என்று கூறிய அவர், தவறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்றார்.

வெளிநாடுகளில் உள்ள சிங்கப்பூர் குடிமக்கள் வெளிநாட்டு வாக்காளராகத் தங்களைப் பதிவு செய்யுமாறு ஆண்டு முழுவதும் விண்ணப்பிக்கலாம்.

சிங்கப்பூரின் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும் ஜூன் மாதத்தில் பொதுமக்களின் பார்வைக்கு அது வைக்கப்படும் என்றும் மே 20ஆம் தேதி தேர்தல் துறை தெரிவித்து இருந்தது.

தேர்தல் நடைமுறை தொடர்பாக இதற்கு முன்னரும் சில தவறுகள் நிகழ்ந்தன.

2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வெளிநாடுகளில் இருந்த 101 சிங்கப்பூரர்களால் வாக்களிக்க இயலாமல் போனது.

இரண்டாவது சம்பவம் கடந்த ஆண்டு நிகழ்ந்தது.

அதிபர் தேர்தலின்போது அச்சடிக்கும் நிறுவனம் செய்த தவற்றின் காரணமாக தஞ்சோங் பகாரில் 4,800க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இரண்டு வாக்குப் பதிவு அட்டைகள் அனுப்பப்பட்டன.

குறிப்புச் சொற்கள்