தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீப்பற்றி எரிந்த மின்சைக்கிள்; வீட்டிலிருந்து வெளியேறிய குடியிருப்பாளர்கள்

1 mins read
bdaebb7e-c7b0-4853-9614-b2f6e8c6ce7e
பீடோக் சவுத்தில் உள்ள புளோக்கின் 5வது மாடியில் மின்சைக்கிள் தீப்பற்றி எரிந்தது. - படம்: டிக்டாக்/ஷாப்வித்லாலா-4 காணொளி

சிங்கப்பூரில் மீண்டும் மின்சைக்கிள் தீப்பற்றி எரிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பீடோக்கில் உள்ள வீவக புளோக்கின் 5வது மாடியில் மின்சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. இதனால் சுவர், தாழ்வாரம் என சுற்றிலும் உள்ள பகுதி கருகி, கறுப்பு நிறமாக மாறியது.

சனிக்கிழமை இரவு 11.45 மணியளவில் சம்பவம் நிகழ்ந்தது. தீயணைப்பாளர்கள் வருவதற்கு முன்பே ஏறக்குறைய ஐம்பது குடியிருப்பாளர்கள் தங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேறிவிட்டனர்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, 38 பீடோக் சவுத் ரோட்டில் நிகழ்ந்த சம்பவத்தில் தாழ்வாரத்தில் இருந்த மின்னாற்றலால் இயங்கும் சைக்கிள் தீப்பற்றி எரிந்ததாகத் தெரிவித்தது.

அங்கு வந்த குடிமைத் தற்காப்புப் படை, தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின்சைக்கிளில் உள்ள மின்கலனில் தீ மூண்டிருக்கலாம் என்பது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.

ஷாப்வித்லாலா-4 என்ற பெயரில் டிக்-டாக் ஊடகத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில் தாழ்வாரத்தின் ஒரு பகுதி தீ சூழ்ந்திருந்ததைக் காண முடிந்தது. வெடிப்பு ஏற்பட்டு குடியிருப்பாளர்கள் அலறும் சத்தமும் கேட்டது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு நினைவூட்டும் வகையில் குடிமைத் தற்காப்பு படை ஆலோசனைக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மின்சைக்கிள்களுக்கு அசல் மின்கலத்தை வாங்கிப் பயன்படுத்துங்கள். நீண்ட நேரத்திற்கு மின்சக்தியை ஏற்றாதீர்கள். இரவு முழுவதும் மின்னேற்ற வேண்டாம் என்று அந்தக் குறிப்பில் குடிமைத் தற்காப்புப் படை கேட்டுக் கொண்டது.

குறிப்புச் சொற்கள்