பயணி ஒருவர் தற்செயலாக விட்டுச் சென்ற மடிக்கணினியை எடுத்து, அதிலிருந்த அனைத்து தரவுகளையும் அழித்து அதை மாற்றியமைத்த தனியார் வாடகை கார் ஓட்டுநருக்கு ஒரு வாரச் சிறை தண்டனை மே 24ஆம் தேதி விதிக்கப்பட்டது.
46 வயதான அந்த கிராப் ஓட்டுநரின் பெயர் ரிதுவான் சுமாடி. தன்மீது சுமத்தப்பட்ட நேர்மையற்ற முறையில் அடுத்தவருக்குச் சொந்தமான சொத்துகளைப் பயன்படுத்திய குற்றச்சாட்டை ரிதுவான் ஒப்புக்கொண்டார்.
இந்தச் சம்பவம் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் தேதி நடந்தது.
42 வயதான பாதிக்கப்பட்ட வங்கி ஊழியர், அன்று பிற்பகல் 1.45 மணியளவில் மரினா பொலிவார்டில் இருக்கும் தனது அலுவலகத்தை விட்டு வெளியேறி ரிதுவானின் காரில் ஏறினார்.
அந்தப் பெண் தவறுதலாக $3000 மதிப்புள்ள தனது மடிக்கணினியை காருக்குள் வைத்துவிட்டு நார்த் பிரிட்ஜ் சாலையில் உள்ள ராஃபிள்ஸ் மருத்துவமனையில் இறங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
அவருக்குப் பிறகு ரிதுவானின் காரில் பயணம் மேற்கொண்ட மற்றோர் பயணி அதைக்கண்டுபிடித்து ரிதுவானிடம் கொடுத்தார்.
ரிதுவான் அந்த மடிக்கணினி பாதிக்கப்பட்ட பெண்ணுடையது தான் என்பதை அறிந்திருந்தும் அதை அவரிடம் ஒப்படைக்க எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை. அந்தப் பெண் மடிக்கணினியை காணவில்லை என்பதை அறிந்து, பலமுறை ரிதுவானின் கைப்பேசிக்கு அழைத்தும் அந்த அழைப்புகளை அவர் நிராகரித்துள்ளார்.
அந்தப் பெண் கிராப் நிறுவனத்திடம் தொடர்புகொண்டு கேட்டபோது, ரிதுவான் அந்தப் பெண்ணின் மடிக்கணினியை தான் பார்க்கவில்லை எனப் பொய்யுரைத்ததாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
பின்னர் இதுகுறித்துக் காவல்துறையிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார்.