டர்ஃப் சிட்டி பெருவிரைவு ரயில் நிலையப் பணிகள் 2024ன் மூன்றாம் காலாண்டில் தொடங்கும்

டர்ஃப் சிட்டி பெருவிரைவு ரயில் நிலையப் பணிகள் 2024ன் மூன்றாம் காலாண்டில் தொடங்கும்

2 mins read
சிங்கப்பூரின் எட்டாவது பெருவிரைவு ரயில் பாதையான குறுக்குத் தீவு ரயில் பாதை ஆக சவால்மிக்க ரயில் திட்டம் என்றும் கூறப்படுகிறது
5d133ad0-9a78-42ed-a60f-49e778304058
2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் கட்டுமானப் பணிகளைத் தொடங்கவுள்ள டர்ஃப் சிட்டி பெருவிரைவு ரயில் நிலையத்தின் சித்தரிக்கப்பட்ட படம். - படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

குறுக்குத் தீவு ரயில் பாதையில் அமைக்கப்படவுள்ள புதிய டர்ஃப் சிட்டி பெருவிரைவு ரயில் நிலையக் கட்டுமானப் பணிகள் இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் தொடங்கப்படும் என நிலப் போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ) திங்கட்கிழமை (மே 27) தெரிவித்துள்ளது.

இந்த நிலத்தடி ரயில் நிலையம் டர்ஃப் கிளப் சாலையின் முந்தைய பிரதான பார்வையாளர் கூடத்துக்கு அருகில் அமைக்கப்படும் எனக் கூறப்பட்டது.

2032ஆம் ஆண்டில் பயணிகள் சேவையைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் குறுக்குத் தீவு ரயில் பாதையின் 2ஆம் கட்டத்தில் அமைக்கப்படும் ஆறு நிலையங்களில் டர்ஃப் சிட்டியும் ஒன்று.

அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளில் புக்கிட் தீமாவில் உள்ள டர்ஃப் சிட்டியில் புதிய குடியிருப்புப் பேட்டை அமைப்பதற்காக 15,000 முதல் 20,000 பொது, தனியார் வீடுகளைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகக் கடந்த வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளில், புக்கிட் தீமாவில் பொதுக் குடியிருப்புகள் கட்டத் திட்டமிடப்படுவது இதுவே முதல் முறை என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறினார்.

டர்ஃப் சிட்டி பெருவிரைவு ரயில் நிலையம் கட்டுவதற்கான ஒப்பந்தம் ஷாங்காய் டனல் இன்ஜினியரிங் கோ (சிங்கப்பூர்) , ஒபயாஷி கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களுக்குக் கூட்டாக வழங்கப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தின் மதிப்பு $530 மில்லியன் எனக் கூறப்பட்டது.

டர்ஃப் சிட்டி பெருவிரைவு ரயில் நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் மிகவும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், அப்பகுதியில் இருக்கும் மாறுபட்ட நிலப் பகுதிகள் குறிப்பாக, புக்கிட் தீமா பகுதியில் இருக்கும் கடினமான தரை நிலைகள் ஆகிய காரணங்களால் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ளும்போது பயன்படுத்தப்படும் சிறப்புத் தொழில்நுட்பங்களை நிலத்தடி ரயில் நிலையம் அமைக்கப் பயன்படுத்த வேண்டியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
பெருவிரைவு ரயில்ரயில் நிலையம்நிலப் போக்குவரத்து ஆணையம்